2011-02-28 15:20:54

லிபியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீதான அரசின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.


பிப் 28, 2011. லிபியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீதான அரசின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து திருப்பீடம் அக்கறையும் ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளதாக ஐநாவில் அறிவித்தார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். இதே கருத்தை வத்திக்கான் வானொலிக்கான தன் பேட்டியிலும் குறிப்பிட்ட பேராயர், இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, ஓர் அமைதியான தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு லிபிய அரசு முன் வர வேண்டும் என்றார்.
சர்வதேச சமுதாயத்தால் முன்வைக்கப்பட உள்ள தீர்வுகள் எவ்வகையில் லிபிய மக்களின் நலனுக்கான தீர்வுகள் என்பது குறித்து அறிவதிலும் திருப்பீடம் ஆர்வமாக உள்ளது என்றார் பேராயர் தொமாசி.
அமைதியான ஒரு தீர்வு காணப்படவில்லையெனில் லிபிய மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி, அதனால் மனிதகுல நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பது குறித்த கவலையையும் வெளியிட்டார் பேராயர்.
லிபியாவில் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டு வருவதையே லிபியாவிற்கு எதிரான சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் சுட்டிக்காட்டுகின்றன என பேராயர் தொமாசி மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.