2011-02-28 15:19:30

'சர்வதேச சமூகம் தாமதிக்கிறது' - ஆம்னஸ்டி சாடல்


பிப்.28,2011. இலங்கையில் இடம்பெற்றதாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்காலக் குற்றங்கள் மற்றும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதிருப்பதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைக் குறை கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐநா இன்னும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டுமெனவும் அக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தத் தாழ்த்த இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்பு நீடிக்கவே செய்யும் என்றும் அக்கழகம் கூறியது.
இக்கழகம், ஐ.நா.மனித உரிமை அவைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், அந்த அவையின் 2010ம் ஆண்டு அமர்வுக்கு முன்னரானச் சம்பவங்களுக்குப் புறம்பாக, இலங்கையில் புதிதாகப் பல மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போதான சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் பற்றிய விசாரணைகளிலும் இலங்கை அக்கறை செலுத்தவில்லையெனவும் அக்கழகம் கவலை தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.