2011-02-28 15:20:09

கிறிஸ்தவர்களுக்கான கர்நாடக அரசின் நிதி ஒதுக்கீடு ஓர் இலஞ்சம் போல் தெரிவதாக தலத்திருச்சபை கூறுகிறது.


பிப் 28, 2011. கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையற்ற கர்நாடக அரசு, அவர்களின் நலவாழ்வுத் திட்டங்களுக்கென அரசு பணத்தை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது கிறிஸ்தவர்களை அமைதிப்படுத்துவதற்கான இலஞ்சமாகத் தெரிவதாக குறைகூறியுள்ளனர் அம்மாநிலத் திருச்சபை அதிகாரிகள்.
மாநில வரவு செலவு திட்ட அறிவிப்பில் முதன்முறையாக 50 கோடி ரூபாயை கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திட்டங்களுக்கென அரசு அறிவித்துள்ளதுபற்றி குறிப்பிட்ட பங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ், கிறிஸ்தவக் கோவில்களைத் தாக்கியவர்களை இனம் கண்டு தண்டிக்கத் தவறியுள்ள அரசு, இத்தகைய நிதி அறிவிப்புகள் மூலம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்வது பலன் தராது என்றார்.
அவரவர் மதத்தைப் பின்பற்றும் உரிமையை அரசு மதித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதையே தாங்கள் எதிர்பார்ப்பதாக உரைத்த பேராயர், தற்போது கிறிஸ்தவர்களுக்கு என அரசு அறிவித்துள்ள நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துள்ளதன் பதில்மொழியே எனவும் உரைத்தார்.
அரசின் இந்த அறிவிப்பு குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட கர்நாடக தலத்திருச்சபையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் குரு ஃபவுஸ்தின் லோபோ, இது கிறிஸ்தவர்களை அமைதிப்படுத்துவதற்கான இலஞ்சமாகவேத் தெரிவதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.