2011-02-26 15:55:39

திருத்தந்தை : கருக்கலைப்பு குறித்தத் தவறான எண்ணத்தைப் போக்குவது மருத்துவர்களின் கடமை


பிப்.26,2011. கருக்கலைப்பு எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது என்று கூறி கருக்கலைப்புக்கு எதிரானத் தனது கடுமையான எதிர்ப்பை இச்சனிக்கிழமை மீண்டும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீட வாழ்வுக் கழகம் நடத்திய 17வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 250 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கருக்கலைப்பு, குழந்தையைக் கொல்லுகின்றது, பெண்ணின் வாழ்வைப் பாழடிக்கின்றது, தந்தையின் மனசாட்சியின் மீது பாரத்தைச் சுமத்துகின்றது, பல சமயங்களில் குடும்ப வாழ்வைச் சிதறடிக்கின்றது என்று தெரிவித்தார்.
கருக்கலைப்பு செய்து கொண்டு மனத்தளவிலே குற்ற உணர்ச்சியோடு வாழ்வு முழுவதையும் கழிக்கின்ற பெண்களை ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியில் தேற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
கருக்கலைப்பு மிகவும் அவசியமானது, இது குழந்தைகளையும் குடும்பங்களையும், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கின்றது என்ற தவறான எண்ணம் கொண்ட அனைவரின் ஒழுக்கநெறி மனசாட்சியைக் கேள்வி கேட்டுள்ள திருத்தந்தை, வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து சமுதாயத்தினரும் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கருக்கலைப்பினால் ஓர் உயிர் கொல்லப்படுகிறது, தாயின் வாழ்வு சீர்குலைக்கப்படுகிறது என்பதைப் புரிய வைக்க வேண்டியது கத்தோலிக்க மருத்துவர்களின் கடமை என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
சிலசமயங்களில், கணவன்கள் கருவுற்ற தங்களது மனைவிமாரைக் தனியாக விட்டுவிடுவது குறித்த கவலை தெரிவித்த அவர், மனைவிகளின் கர்ப்பக் காலத்தில் அவர்களது கணவன்மார் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்








All the contents on this site are copyrighted ©.