2011-02-25 15:45:10

லிபியாவில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்


பிப்.24,2011. லிபிய நாட்டு நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கு ஆதரவானப் படைவீரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம் பெற்று வரும் வேளை, அந்நாட்டில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதிகச் சுதந்திரம் கேட்டுப் போராடும் மக்கள் மீது லிபிய அதிபர் முவாம்மர் கடாஃப்பி கடும் வன்முறை நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளை, அந்நாட்டின் கிழக்கில் பாதிப் பகுதி அதாவது பென்காசியும் மற்ற நகரங்களும் இராணுவத்தின் ஆதரவுடன் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளன.
தலைநகர் திரிப்போலியை ஆக்ரமிப்பது தொடர்பாகக் கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வன்முறைகளில் ஆயிரம் முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்ற அச்சமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
லிபியாவில் சரியான ஆவணங்கள் இன்றி வாழும் 500 குடியேற்றதாரர்களை வெளியேற்றுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை முயற்சித்து வருகிறது.
லிபியாவிலுள்ள கத்தோலிக்கர் முழுவதும் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.