2011-02-24 15:39:54

லெபனன் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


பிப்.24,2011. பல்வேறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகங்களைக் கொண்டிருக்கும் லெபனன் நாடு இத்தகைய ஓர் அமைப்பினாலே, சுதந்திரம் மற்றும் ஒருவர் ஒருவரை மதிக்கும் நல்லிணக்க வாழ்வுக்கு அப்பகுதிக்கு மட்டுமல்லாமல் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாகத் திகழ முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று லெபனன் அரசுத் தலைவர் மிஷேல் ஸ்லைமானை வத்திக்கானிலுள்ள தனது நூலகத்தில் முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, லெபனன் நாட்டுப் புதிய அரசு அந்நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் உறுதியான தன்மைக்கு ஆதரவாகச் செயல்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியின், குறிப்பாக, சில அரபு நாடுகளின் தற்போதைய நிலவரம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இப்பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படவும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வுக்குக் கிறிஸ்தவர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில், லெபனன் புனிதர் மரோனின் திருவுருவத்தை இப்புதனன்று திருத்தந்தை ஆசீர்வதித்தது முதலில் இடம் பெற்றது.
மேலும், இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஸ்லைமான்.
இதற்குப் பின்னர், லெபனன் அரசுத்தலைவர் ஸ்லைமான் மனைவி உட்பட 15 பேர் கொண்ட அந்நாட்டு உயர்மட்டக் குழுவும் திருத்தந்தையைச் சந்தித்தது. அரசுத் தலைவர் ஸ்லைமான் திருத்தந்தைக்கு, 17ம் நூற்றாண்டு தந்தம் மற்றும் தங்கத்தாலானத் தூப கலசத்தைப் பரிசாகக் கொடுத்தார். திருத்தந்தையும் பாப்பிறை மெடலை ஸ்லைமானுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்








All the contents on this site are copyrighted ©.