2011-02-24 15:47:57

லிபியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கிறிஸ்தவ அமைப்பின் அழைப்பு


பிப்.24,2011. லிபியாவில் தொடர்ந்து நிலவும் பதட்டச் சூழ்நிலையில் அந்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக, லிபியாவில் போராடும் மக்கள் மேல் அரசு மேற்கொண்டு வரும் வன்மையான அடக்கு முறைகள் குறித்து பல நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஐ.நா. பொதுச் செயலரும் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
இச்சூழலில் அந்நாட்டில் உள்ள பிற நாட்டவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் ஈடுபட்டுள்ளது. எனினும், எரித்ரியா, எத்தியோப்பியா, மற்றும் சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து லிபியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு எந்த நாடும் உதவாத நிலையில், அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று CSW என்ற அகில உலக கிறிஸ்தவ ஒன்றிணைப்பு அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
லிபியாவின் Tripoliயில் உள்ள கத்தோலிக்கக் கோவிலில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமென்று இத்தாலியில் உள்ள Habeshia என்ற அரசு சாரா அமைப்பு இத்தாலிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
அகதிகளாய் Tripoliயில் தங்கியுள்ள 40 ஆப்ரிக்கக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலை தருவதாக உள்ளதால் அகில உலக குடும்பமும், சிறப்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இவ்விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டுமென்று CSW இயக்குனர் Andrew Johnston கூறினார்.








All the contents on this site are copyrighted ©.