2011-02-24 15:31:51

பிப்ரவரி 25 - வாழ்ந்தவர் வழியில்.....


பிலிப்பைன்ஸ் நாட்டு சனநாயக வரலாற்றில் அழிக்கப்பட முடியாதபடி பதிவு செய்யப்பட்ட நாள் பிப்ரவரி 25. 1986ம் ஆண்டு இந்த நாளில்தான் அந்நாட்டில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது. அதைப் பார்த்துப் பயந்த அப்போதைய பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினன்ட் இம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos) ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். பெர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965ம் ஆண்டு முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் தனது ஆட்சிக் காலத்தில் கடும் ஊழல், மனித உரிமை மீறல்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதலீடு செய்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 1973ல் மூன்றாவது தடவையாக அரசுத்தலைவர் தேர்தலில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டதால் இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் அவரின் இருபது வருட ஆட்சியை எதிர்த்து பல அரசியல், இராணுவ அதிகாரிகள், கர்தினால் ஹைமே சின் உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் என இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் 1986ம் ஆண்டு அஹிம்சா வழியில் பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். பெரும் கூட்டமாகச் சாலைகளில் செபங்கள் சொல்லிக் கொண்டு சென்றனர். இது பிலிப்பைன்சில் சனநாயகத்தை மீண்டும் அமைப்பதற்கு உதவியது.
உயர்ந்த உள்ளங்கள் சொல்கிறார்கள்: “இது நடக்காது என்று நினைத்து எந்த விடயத்தையும் கைவிடாதீர்கள். நீங்கள் நம்பிக்கையோடு போராடுகிற போது எதிர்மறையான விடயங்கள்கூட பயந்து விலகி வெற்றி சாத்தியமாகும்” என்று







All the contents on this site are copyrighted ©.