2011-02-23 16:44:22

பரோடா ஆயர் : கோத்ரா இரயில் தீ வைப்பு குறித்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது


பிப்.23,2011. 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா இரயில் நிலையத்தில் தீக்கிரையான இரயில் குறித்து இச்செவ்வாயன்று குஜராத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்று பரோடா மறைமாவட்ட ஆயர் Rosario Godfrey de Souza கூறினார்.
59 இந்துக்களின் உயிர்களைப் பலி வாங்கிய இந்த தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 63 பேரில் 31 பேரின் குற்றத்தை உறுதி செய்து அவர்களுக்கு இச்செவ்வாயன்று அகமதாபாத் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, பரோடா ஆயர் தன் கருத்தை இவ்விதம் தெரிவித்தார்.
2002ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைச் செயலா என்று விவாதித்து வந்த நீதிமன்றம், இச்சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதென்று தன் தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், முக்கிய குற்றவாளிஎன்று கைது செய்யப்பட்ட Maulvi Umarji உட்பட 63 பேரை விடுவித்துள்ளது.
இத்தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளைச் சுற்றிக் காட்டிப் பேசிய மனித உரிமை ஆர்வலர் இயேசுசபை குரு Cedric Prakash குஜராத்தின் நீதித்துறை நீதிக்கு எதிராகவும், அரசுக்குச் சாதகமாகவும் தந்துள்ள இந்தத் தீர்ப்பு கேவலமான ஒன்று என்று கூறினார்.
குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ள 63 பேரைக் குறித்து பேசிய சமுதாய ஆர்வலரான மற்றொரு இயேசுசபை குரு Stanny Jebamalai விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அரசு தகுந்த ஈடு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.