2011-02-23 16:41:58

நியுசிலாந்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம், செபம்


பிப்.23,2011. இச்செவ்வாய் நண்பகலில் நியுசிலாந்தின் Christchurch பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கும், இப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் , செபங்களையும் திருத்தந்தை தெரிவித்தார்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை தன் அனுதாபங்களைக் கூறியபின், இப்பேரிடரால் துன்பப்பட்டு வரும் நியுசிலாந்து மக்களுக்குத் தன் சிறப்பான செபங்களையும் தெரிவித்தார்.
இன்னும், Christchurch ஆயருக்குத் திருத்தந்தையின் பெயரில் அனுதாபத் தந்தியையும் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே
மேலும், நியுசிலாந்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Keith Patrick O'Brien.
Christchurchல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் இதுவரை 65 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 100 பேருக்கும் மேல் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று பிபிசி செய்தி கூறுகிறது.
இந்நிலநடுக்கத்தால் Christchurchல் உள்ள கத்தோலிக்க, மற்றும் ஆங்கலிக்கன் பேராலயங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.
நாட்டின் இராணுவம், மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல நிறுவனங்கள் இரவுபகலாக உழைத்து வருகின்றன என்று Christchurch நகர மேயர் கூறியுள்ளார்.
இந்நிலநடுக்கத்தின் விளைவாக நியுசிலாந்துக்கருகே உள்ள ஒரு பனிப்பாறையில் இருந்து 3 கோடி டன் பனிப் பாறை இடிந்துள்ளதென்றும், இதனால் அப்பகுதியில் மாபெரும் அலைகள் உருவாகியுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.
1931ம் ஆண்டு அந்நாட்டில் Hawke 's Bay பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 256 பேர் இறந்தனர். அதற்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு பல உயிர்களைப் பலி வாங்கியுள்ள நிலநடுக்கம் இதுவே என்று ஒரு செய்திக் குறிப்பு சுட்டிக் காட்டுகின்றது







All the contents on this site are copyrighted ©.