2011-02-23 15:56:24

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


பிப்ரவரி 23, 2011. கடந்த வாரம் போல் இல்லாமல் இவ்வாரம் உரோம் நகரமானது அதற்கு முந்தைய வாரத்தின் வெப்ப நிலையை, அதாவது அதிக சூரிய ஒளியுடன் கோடைக்காலம் போன்ற ஒரு மாயத்தோற்றத்தைத் தந்தாலும் குளிர்ந்த காற்றும் வீசி, இன்னும் குளிர் காலத்தில்தான் இருக்கிறோம் என்ற உண்மையை உணர்த்திக் கொண்டிருந்தது. இப்புதனன்று திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் தன் பொதுமறைபோதகத்தை முன்னிட்டு திருப்பயணிகளைச் சந்தித்த பாப்பிறை 16ம் பெனடிக்ட், புகழ்பெற்ற இயேசு சபை இறையியலாளரும் திருச்சபையின் மறைவல்லுனரும் ஆன புனித இராபர்ட் பெல்லார்மின் குறித்து தன் சிந்தனைகளை வழங்கினார். திரிதெந்து பொதுச்சங்கத்தைத் தொடர்ந்து வந்த காலங்களில் முதலில் லுவெயினிலும் பின்னர் உரோமையிலும் இறையியலைக் கற்பித்தார் புனித இராபர்ட். அவரின் மிகவும் புகழ் வாய்ந்த புத்தகமான 'எதிர்மறை வாதம்' (Controversiae) என்பது புரோட்டஸ்டான்ட் கிறிஸ்தவ சபையின் இறையியல் கேள்விகளுக்கு வரலாற்று மற்றும் இறையியல் கண்ணோட்டத்தில் பதில் வழங்க முனைந்த அதே வேளையில் மிகவும் பரவலாக அறியப்பட்ட அவரின் புத்தகமானது கிறிஸ்தவ மறைக்கோட்பாடுகளின் போதனைச் சுருக்கமாக இருந்தது. உரோமன் கல்லூரியின் இயேசு சபை மாணவர்களுக்கான ஆன்மீகக் குருவாகவும் இவர் செயலாற்றியுள்ளார். அம்மாணவர்களுள் புனித அலோசியஸ் கொன்சகாவும் அடங்குவார். புனித இராபர்ட்டை கர்தினால் நிலைக்கு உயர்த்திய திருத்தந்தை எட்டாம் கிளமென்ட், அவரை காப்புவாவின்(Capua) பேராயராகவும் நியமித்தார். அங்கேயே மூன்றாண்டுகள் போதகப்பணியிலும் மறைப்பணி நடவடிக்கைகளிலும் செலவிட்டபின் திருப்பீடப் பணிகளுக்கென உரோமைக்கு அழைக்கப்பட்டார் புனித இராபர்ட். இறைவனை அன்புடன் பின்பற்றுதல் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானித்தலை வலியுறுத்தும் ஆழமான இக்னேசியப் பயிற்சிகளை பிரதிபலிக்கும் பல ஆன்மீகப் புத்தகங்களை இவர் தன் கடைசி காலத்தில் எழுதினார். நம் பணிகள் மற்றும் நம் கிறிஸ்தவப் புனிதத்தன்மையை நோக்கிய தேடுதலை ஒன்றிணைக்கவும், ஜெபத்தின் மூலம் கிறிஸ்துவுடன் நெருங்கி வருவதில் வளரவும், இறைவன் மற்றும் அவரின் வார்த்தைகளின் உண்மை நோக்கி உள்மனமாற்றம் பெறுவதன் வழி திருச்சபையின் புதுப்பித்தலுக்குப் பங்காற்றவும் புனித இராபர்ட்டின் எடுத்துக்காட்டு நம்மைத் தூண்டுவதாக என தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.