2011-02-22 15:37:21

திருத்தந்தை : மனிதன் தன்னலச் சோதனையை வெல்வதற்கு நோன்பு அனுபவம் உதவுகின்றது


பிப்.22,2011. மனிதன் அன்பின் கூறுகளில் வளருவதற்குத் தடையாய் இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்வதற்கு நோன்பு அனுபவம் வழியாக அவன் கற்றுக் கொள்ள முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வருகிற மார்ச் 9ம் தேதி சாம்பல் புதனோடு தொடங்கும் இந்த 2011ம் ஆண்டின் தபக்காலத்திற்கெனத் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கும் நோன்பானது, கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆழமான மத முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்றுரைக்கும் திருத்தந்தை, நமது உணவு மேஜையில் வறியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தன்னலத்தை மேற்கொள்ளக் கற்றுக் கொள்கிறோம் என்றார்.

அத்துடன், சுயநலத்தைப் புறந்தள்ளி, நமக்கு நெருக்கமாக இருக்கும் கடவுளைக் கண்டு கொள்ளவும், பல சகோதர சகோதரிகளின் முகத்தில் கடவுளைக் காணவும் நோன்பு உதவுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனமாற்றத்திற்கான நமது அர்ப்பணத்தின் வெளிப்பாடுகளாக பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் நோன்பு, ஈகை, செபம் ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவின் அன்பை இன்னும் அதித்தீவிரமாக வாழ்வதற்கு இத்தபக்காலம் போதிக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

நமது வாழ்வை நேர்மையுடன் ஆழமாகப் பரிசீலனை செய்து நமது பலவீனங்களை ஏற்று ஒப்புரவு அருட்சாதனத் திருவருளைப் பெற்று கிறிஸ்துவை நோக்கி ஒரு தீர்மானமானப் பயணத்தைத் தொடருவதற்கு இத்தபக்காலம் சாதகமான காலம் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

கடவுளுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதற்குத் தடையாய் இருக்கும் பண ஆசையால் இந்த நம் பயணத்தில் அடிக்கடி நாம் சோதிக்கப்படுகிறோம், இந்தப் பேராசை வன்முறைக்கும் சுரண்டலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லும், இதனாலே திருச்சபை இத்தபக்காலத்தில் தானதர்மத்தை ஊக்குவிக்கின்றது என்றார் அவர்.

பொருட்களை வணங்குதல், நம்மைப் பிறரிடமிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல், மனிதனைக் கடவுளிடமிருந்து திசை திருப்பி அவனை ஏமாற்றி மகிழ்ச்சியின்றி வைக்கின்றது என்று சொல்லி தானதர்மத்தின் சிறப்பை விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இத்தபக்காலத்தில் தினமும் இறைவார்த்தையைத் தியானித்து அதனை உள்வாங்குவதன் மூலம் செபம் எவ்வளவு நேர்த்தியானது என்றும் அதற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றும் கற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

சாத்தான் பணியில் இருக்கிறான், அவன் ஒருபொழுதும் சோர்வடைவதில்லை, இக்காலத்திலும் இறைவனுக்கு நெருக்கமாகச் செல்ல விரும்பும் மக்களை அவன் சோதித்துக் கொண்டிருக்கிறான் என்ற திருத்தந்தை, இவ்வுலகில் ஆட்சி செய்யும் சக்திகளாகிய இருளின் தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட கிறிஸ்தவ விசுவாசம் துணைசெய்கின்றது என்றார்.

நம் மீட்பரோடு ஆள்-ஆள் உறவு கொள்வதன் மூலம், நோன்பு, தானதர்மம், செபம் ஆகியவை மூலம், கிறிஸ்துவின் உயிர்ப்பை நோக்கிய நமது மனமாற்றப் பயணம் நமது திருமுழுக்கு திருவருட்சாதனத்தை மீண்டும் கண்டுணரச் செய்கின்றது என்றும் திருத்தந்தை அதில் கூறியுள்ளார்.

“நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்” (கொலோ. 2: 12) என்பது திருத்தந்தையின் இவ்வாண்டு தவக்காலச் செய்தியின் கருப்பொருளாகும்.








All the contents on this site are copyrighted ©.