2011-02-21 15:40:57

மூச்சு விடுபவரெல்லாம் மனிதரா?


பிப்.21,2011. நாடோடி இன மக்கள் குழு ஒன்று அண்மையில் அந்த ஊர் ஆற்றங்கரைப் பக்கம் கூடாரங்களை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர்கள் அனைவரும் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆற்றில் ஒரு மனித உடல் மிதந்து வந்ததைக் கண்டனர். உடனே ஓடிப் போய்த் தண்ணீரில் குதித்து அந்த மனிதரைக் காப்பாற்றினர். பின்னர் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது மற்றுமோர் உடல் மிதந்து வந்தது. உடனே அந்த மனிதரையும் காப்பாற்றினர். ஒரு நிம்மதியுடன் மீண்டும் அவர்கள் வேலைக்குப் புறப்பட்ட போது இன்னுமோர் உடல் மிதந்து வந்தது. இந்த ஆளையும் காப்பாற்றினர். ஆனால் இதற்குப் பின்னர் அவர்களில் ஒருவர் ஒரு கேள்வியை மற்றவர்களிடம் கேட்டுவிட்டு, “வாருங்கள் இதற்கான மூல காரணத்தைக் கண்டுபிடிப்போம்” என்று ஆற்றில் இறங்கினார். மற்ற அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ஆம். துனிஷீயாவில் ஓர் இளைஞன், எகிப்தில் ஓர் இளைஞன் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது அந்நாடுகளின் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கானத் தீர்வாக அமைந்தது. அந்நாடுகளில் மக்கள் அனுபவித்து வந்த துன்பங்களுக்கான ஆணிவேரே பிடுங்கி எறியப்பட்டுள்ளது. துனிஷிய மற்றும் எகிப்து நாடுகளின் மக்கள் கண்ட வெற்றியில் லிபியா, அல்ஜீரியா, ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளின் மக்களும் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜோர்டானிலும், உள்ளூர்ப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. சுதந்திர வாழ்வு கேட்டு வீதிக்கு வந்துள்ள இந்த மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க அரபு நாடுகளின் மக்கள் சக்தியை எந்தப் பீரங்கி வண்டிகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. மனித உயிர்கள் பலியாவது பற்றி இரண்டு தரப்புகளுமே பயப்படுவதாய்த் தெரியவில்லை. லிபிய நாட்டு சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபியின் (Muammar Gaddafi) 42 வருட ஆட்சியை எதிர்த்து கடந்த வியாழன் முதல் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டதில் சுமார் 250 பேர் பலியாகியுள்ளனர். உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்று கடாஃபியின் மகன் Saif al-Islam, இத்திங்களன்று விடுத்துள்ள எச்சரிக்கை, போராட்டங்கள் மேலும் வலுக்கும் என்றே எண்ண வைத்துள்ளன.

அன்பர்களே, வேலையில்லாமல் பசி, பட்டினியால், உரிமை இழந்து மாண்பை இழந்து ஆண்டுக்கணக்காய் அல்லாடும் மக்கள் நடத்திய அமைதியானப் போராட்டத்தை ஒடுக்க லிபியாவில் இராணுவத் தளவாடங்கள், சிறப்பாக வெடிமருந்து குண்டுகளும், ஏமனில் மின்சாரத் தடிகளும், பஹ்ரைனில் இராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அமைப்பு இயக்குனர் நவநீதம்பிள்ளை, அரசுகளின் இந்த உரிமை மீறல்களையும் வன்முறை நடவடிக்கைளையும் கடுமையாய்ச் சாடியிருக்கிறார்.

சில அரபு நாடுகளில் மக்களின் சமூக நீதிக்கான எழுச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் ஒரு சூழலில் இஞ்ஞாயிறன்று சர்வதேச சமுதாயம், அனைத்துலக சமூக நீதி நாளைக் கடைபிடித்தது. வறுமை, தனிமை, வேலைவாய்ப்பின்மை போன்ற விவகாரங்களைக் களையும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை பிப்ரவரி 20ம் தேதியை சமூகநீதி நாளாக அனுசரிக்க வேண்டுமெனத் தீர்மானித்தது. இதன்படி 2009ம் ஆண்டிலிருந்து இந்த உலக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தரமான வேலை, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, எல்லாருக்கும் நீதி போன்ற இவை கிடைப்பதற்கு அரசுகள் கவனம் செலுத்துமாறு இந்நாளில் ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த உலக நாளுக்கென செய்தி வழங்கிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்...

“இன்று உலகில் எண்பது விழுக்காட்டு மக்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பு இல்லை. உலகில் பரவலாக சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. எனவே மக்களுக்கு அடிப்படை வசதிகளும் தரமான ஊதியம் வழங்கும் வேலைகளும், ஏழைகள், நலிந்தவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பும் கொடுக்கப்படும் சமூக நீதியின் புதிய சகாப்தம் உருவாக்கப்பட வேண்டும். சமூக நீதி இக்காலத்திற்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. இதுதான் ஒரு நாட்டின் உறுதியான தன்மைக்கும் உலகளாவிய வளமைக்கும் அடித்தளம். எனவே ஒவ்வொரு மனிதனின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ILO என்ற உலக தொழில் நிறுவனப் பொது இயக்குனர் ஹூவான் சோமாவியாவும்(Juan Somavia), இந்நாளுக்கானத் தனது செய்தியில், சமூக நீதிக்கும் தேசிய உறுதிப்பாட்டிற்கும் இடையே இருக்கின்ற தொடர்பை கோடிட்டுக் காட்டியிருக்கின்றார். வட ஆப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் இடம் பெறும் சனநாயக ஆதரவுப் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு இவை எவ்வாறு துனிஷிய அரசுத்தலைவர் சின் எல் அபிதின் பென் அலியையும் எகிப்திய அரசுத்தலைவர் ஹோஸ்னி முபாரக்கையும் பதவியை விட்டுத் தூக்கியுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார். “வேலைகளும் நீதியும், உணவும் மனித மாண்பும், பாதுகாப்பும் சனநாயகமும், தேசிய பாதுகாப்பும் சர்வதேச பாதுகாப்பும்” ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதை துனிஷியாவிலும் எகிப்திலும் இடம் பெற்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. வருங்காலத்தில் நாடுகளில் சமூக நீதி காக்கப்படாவிட்டால் தேசியத்தின் உறுதித்தன்மை ஆட்டம் கொள்ளும் என்பதை இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

“இன்று உலகில் சுமார் எட்டு கோடி இளையோர் உட்பட இருபது கோடிக்கு மேற்பட்டோருக்கு வேலையில்லை. சுமார் 150 கோடிப் பேர் மோசமான சூழலில் வேலை செய்கின்றனர். எனவே சமூக நீதியைக் கொண்டு வருவதற்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்றும் Somavia வலியுறுத்துகிறார். இந்த ILO நிறுவனத்தின் 183 உறுப்பு நாடுகளின் அரசுகளும் தொழில் அதிபர்களும் தொழிலாளிகளும் வருகிற ஜூனில் நடத்தவிருக்கும் கூட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நீண்ட கால யுக்திகள் அமைக்கப்படும் எனப் பலர் எதிர்பார்க்கின்றனர்.

ஐ.நா.வின் பெண்கள் அமைப்பு இயக்குனர் Michelle Bachelet பேசுகையில், உலகின் ஏழைகளில் பெரும் பகுதியினர் பெண்கள் என்றும் உலகில் 144 கோடிப் பேர் ஒரு நாளைக்கு 57 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்தில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்கின்றனர் என்றார்.

தற்சமயம் ஆப்கானிஸ்தானில் முப்பதாயிரம் கோடி டாலர் (மூன்று டிரில்லியன்) பெறுமான தங்கம், செம்பு, இரும்பு, எண்ணெய் மற்றும் பிற கனிமங்கள் இருக்குமிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு இவை போதுமானவை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு சிக்கல். இந்த இடங்கள், பாரம்பரியமாகத் தலிபான்கள் கைவசம் இருக்கும் Helmand நதியின் தென்கரையில் இருக்கின்றன. ஆப்கானில் நாடெங்கும் பரவலாகக் கனிமங்கள் நிறைந்திருக்கின்றன என்று அந்நாட்டு கனிமவளத்துறை அமைச்சர் Wahidullah Shahrani ம் சொல்லியிருக்கிறார். இந்தக் கனிமங்களைத் தோண்டியெடுத்தாலே பலருக்கு வேலை கிடைக்கும். நாட்டில் பசியும் பட்டினியும் குறையும். பணம் பெருகும். சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான கூறுகள் கைகூடி வரும். ஆனால் இவை நடப்பது எப்போது?

இந்தியாவின் மங்களூரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் நீதி கேட்டு இஞ்ஞாயிறன்று இரண்டு கிலோ மீட்டருக்கும் மேலான தூரம் அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர். 2008ம் ஆண்டில் கிறிஸ்தவ ஆலயங்களும் கிறிஸ்தவர்களும் தாக்கப்பட்டது குறித்து திரித்து சமர்ப்பிக்கப்பட்ட சோமஷேகரா குழு அறிக்கையைக் கண்டித்து தங்களுக்கு நீதி கேட்டு எல்லா கிறிஸ்தவ சபைகளும் இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்தின. ஒரு நாடு நலமாக இருக்கும் வரை அங்கு நீதிக்கானக் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும்.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் சமூக நீதி கிடைப்பதற்கு ஆஸ்கார் ரொமெரோ என்ற கத்தோலிக்கப் பேராயர் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக வேண்டியிருந்தது. ஏழ்மை, சமூக அநீதி, கொலைகள் மற்றும் சித்ரவதைகளுக்கு எதிராகப் பேசி வந்தவர் பேராயர் ரொமேரோ. அமெரிக்காவில் ஆப்ரிக்க இனத்துக்குச் சமூக நீதி கிடைப்பதற்கு மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் என்ற கிறிஸ்தவப் போதகர் துப்பாக்கிக்கு உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. இவர் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வாஷிங்டனில் வேலைகள் கேட்டு, சுதந்திரம் கேட்டு மாபெரும் பேரணியை நடத்தி இறுதியில் லிங்கன் நினைவிடத்தில் நின்று “எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நாம் வெற்றி கொள்வோம்” என்று உரையாற்றி நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்து வெற்றி கண்டவர். இவர் சொல்வார் –

"வாழ்வின் தவிர்க்க முடியாத உரிமைகள், சுதந்திரம், மகிழ்ச்சி இவற்றை கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் அனுபவிக்க உறுதி வழங்கப்பட வேண்டும். சமநீதி கேட்டு நாம் தனியாக நடக்க முடியாது. நாம் சேர்ந்து நடக்கும் போது எப்பொழுதுமே முன்னோக்கியே நடப்போம் என்று வாக்குறுதி எடுக்க வேண்டும். சோர்வு என்ற பள்ளத்தாக்கில் விழுந்துவிடக் கூடாது. முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும் முன்னாள் எஜமானர்களின் பிள்ளைகளும் ஒரே சகோதரத்துவ மேஜையில் அமர்ந்து விருந்துண்ணும் நாளைக் கனவு காண்கிறேன். தோல் நிறத்தை வைத்து அல்ல, பண்புகளின் நிறத்தை வைத்து அனைவரும் தீர்மானிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலிருந்தும் சுதந்திர ஓசை ஒலிக்கட்டும். எல்லா வாழ்வும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றை எது நேரிடையாகத் தாக்கினாலும் அது எல்லாவற்றையும் மறைமுகமாகத் தாக்குகிறது".

துனிஷியாவிலும் எகிப்திலும் கஷ்டப்பட்ட ஒரு பாமரனின் தற்கொலையால் வெடித்த புரட்சிகள் அந்நாடுகளின் தலைவிதியையே மாற்றி எழுத வைத்துள்ளன. ஆம். மார்ட்டின் லூத்தர் கிங் சொன்னது போல, எல்லா வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஒன்று தாக்கப்படும் போது அனைத்தும் தாக்கப்படுகின்றன. உடல் உறுப்பு ஒன்று பாதிக்கப்பட்டால் உடல் முழுவதும் பாதிக்கப்படும். எனவே சமூக நீதி கிடைக்கத் தனித்து நின்று போராடுவதைவிட சேர்ந்து நின்று போராடுவதே பயன்தரும். மூச்சு விடுபவரெல்லாம் மனிதர் அல்ல. முயற்சி செய்பவரே மனிதர் என்று சொல்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.