2011-02-21 15:30:22

ஈராக் நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து திருச்சபைத் தலைவர்கள் கவலை.


பிப் 21, 2011. ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமல்ல, அங்குள்ள அனைத்து மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து அந்நாட்டு திருச்சபைத் தலைவர்கள் இத்தாலியின் ஜெனிவாவில் கூடி சர்வதேச கத்தோலிக்கத் தலைவர்களுடன் விவாதித்தனர்.

நாட்டிற்குள் நிலவும் பாதுகாப்பின்மை குறித்தும் அகதிகள் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கும் புலம்பெயர்தல் குறித்தும் ஈராக் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலையை வெளியிட்டனர்.

அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பின் சூழலை உருவாக்க வேண்டிய அரசின் கடமையையும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாட்டில் நம்பிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்ற கீழை ரீதி அசீரிய திருச்சபையின் பேராயர் மார் ஜியோர்ஜிஸ் சிலிவா, நாட்டை விட்டு வெளியேறியுள்ள மக்கள் நாடு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் இருப்பினும், தற்போதைய அவசரத்தேவை என்பது ஈராக்கில் தற்போது வாழும் மக்களுக்கான பாதுகாப்பே என்றார்.

இயல்பு வாழ்வு நாட்டிற்குள் திரும்பி விட்டால், வளர்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பதையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.

ஈராக் கிறிஸ்தவ சபைகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றபோதிலும் அவை இன்னும் உயிர் துடிப்புடனேயே செயலாற்றி வருகின்றன என்பதை ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் எடுத்துரைத்தனர்.








All the contents on this site are copyrighted ©.