2011-02-19 16:00:08

ஞாயிறு வாசகங்கள்


I லேவியர் நூல் 19: 1-2, 17-18
II கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 3: 16-23 
மத்தேயு நற்செய்தி 5: 38-48
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். “‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”







All the contents on this site are copyrighted ©.