2011-02-17 15:25:53

கடல்சார்ந்த மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கென வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கு


பிப்.17,2011. கடல் கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உடல், மன, ஆன்மீக ரீதியான உதவிகளை மேற்கொள்ளும் வழிகளை ஆராய வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
கடல்சார்ந்த மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கென இத்திங்கள் முதல் புதன் வரை மூன்று நாட்கள் வத்திக்கானில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவையால் நடத்தப்பட்டது.
கடல்வழி பயணத்தில், சிறப்பாக சரக்குக் கப்பல்களில் பயணம் செய்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்கள் பயணம் மேற்கொள்ளும்போது அவர்களது குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவை நமது அருட்பணிகளில் சிந்திக்கப்பட வேண்டியவை என்று இத்திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Anotonio Veglio கூறினார்.
இவ்வாண்டு நடைபெற்ற கருத்தரங்கில் கடல் கொள்ளைக்காரர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வழிகளும், அத்தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிகளும் விவாதிக்கப்பட்டன.மேலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு பல சமயங்களில் அநீதமான முறைகளில் சிறைப்படுத்தப்படும் மீனவர்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.