இந்தியப் பயணம் தன்னை அதிகம் கவர்ந்ததாகக் கூறும் கர்தினால்
பிப்.16,2011. இந்தியா ஓர் அழகான நாடு, அங்கு மதங்கள் மதிக்கப்படுவதே தன்னைக் கவர்ந்த
மிகச் சிறந்த அம்சம் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor தெரிவித்தார். மறைந்த
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட முதல் திருப்பயணத்தின்
25ம் ஆண்டைக் கொண்டாட, தற்போதையத் திருத்தந்தையின் பிரதிநிதியாக இந்தியாவில் அண்மையில்
பயணங்களை மேற்கொண்ட கர்தினால் Murphy-O’Connor, BBC தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த
பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார். இறையடியார் இரண்டாம் ஜான்பால் நினைவாகக் கொண்டாடப்பட்ட
அனைத்து கூட்டங்களிலும் மக்கள் மிக ஆர்வமாய் பங்கெடுத்ததையும், அவர்கள் தனக்கு அளித்த
மாலை, மரியாதைகள் தன்னை அதிகம் கவர்ந்ததாகவும் கர்தினால் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.இந்திய
கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருந்தாலும் அவர்கள் நாட்டில் ஆற்றவேண்டிய
கடமை மிகப் பெரியது என்று 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை
இரண்டாம் ஜான்பால் எடுத்துரைத்ததை மீண்டும் நினைவு கூர்ந்த கர்தினால் Murphy-O’Connor,
தனது பயணத்தின்போது, இந்திய கத்தோலிக்கத் திருச்சபை உறுதியுடன், ஆர்வமுடன் இயங்கி வருவதைக்
காண முடிந்ததென்று எடுத்துரைத்தார்.