2011-02-15 15:49:02

விவிலியத் தேடல்


RealAudioMP3
திருப்பாடல் 23ன் "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." என்ற வரியில் நம் தேடலை சென்ற வாரம் ஆரம்பித்தோம். நன்றி என்பது ஒரு மன நிலை, நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் பார்க்கும் ஒரு மன நிலை. இந்த மன நிலையை இன்னும் சிறிது ஆழமாய் அடுத்தத் தேடலில் சிந்திப்போம். என்று சென்ற தேடலை  நிறைவு  செய்தோம். இன்று தொடர்கிறோம்.

நன்றி என்ற சொல்லில், அந்த உணர்வில் ஒரு சில அழகான எண்ணங்கள் பொதிந்துள்ளன. முதல் எண்ணம்... நன்றி என்பது நல்லவைகளுக்குச் சொல்லப்படும் ஒரு சொல். ஒரு சில வேளைகளில் தீமை போல வரும் சில பிரச்சனைகளும் பின்னர் நன்மையாய் மாறும்போது, நாம் நன்றி உணர்வு கொள்கிறோம். தமிழில் 'நன்றி' என்ற சொல்லைப்போலவே ஒலிக்கும் மற்றொரு சொல் 'நன்று'. இவ்விரு சொற்களையும் இணைத்து நாம் எண்ணிப்பார்க்க நமக்குப் பெரிதும் உதவியாய் இருப்பது நமது 108வது திருக்குறள்.
"நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."

நன்றி என்பதை வார்த்தைகளில் நாம் சொல்லாத நேரங்களே அதிகம் என்பது நன்றியைக் குறித்த இரண்டாவது எண்ணம்... நன்றி என்ற வார்த்தையை இத்திருப்பாடல் முழுவதிலும் ஓரு முறைகூட ஆசிரியர் பயன்படுத்தவில்லை. என் ஆயனாம் இறைவன் எனக்கு இவைகளைச் செய்தார், செய்கிறார், இனியும் செய்வார் என்று அவர் கூறும் ஒவ்வொரு கூற்றும் அவர் உள்ளம் நன்றியால் நிறைந்திருப்பதை நமக்குத் தெளிவாக்குகிறது. வாய் வார்த்தையாய் சொன்னால்தான் நன்றியா? வேறு எத்தனையோ வகைகளில் நம் நன்றியை வெளிப்படுத்தலாமே!
குழந்தைப் பருவத்திலிருந்து நமக்குச் சொல்லித் தரப்படும் ஒரு முக்கியப் பாடம் நமக்கு யாராவது எதையாவது கொடுத்தால், உடனே 'நன்றி' சொல்ல வேண்டும் என்ற பாடம். குழந்தையொன்று பேச ஆரம்பித்ததும், அதற்கு முதலில் சொல்லித் தரப்படும் வார்த்தைகள் 'அம்மா, அப்பா'. அதற்கு அடுத்தபடியாக நாம் சொல்லித்தரும் வார்த்தைகள்: Thank you, Thanks Auntie, Thanks Uncle என்ற வார்த்தைகள். ஒரு குழந்தைக்கு ஒரு பொருளை நாம் கொடுத்ததும், அக்குழந்தை பெற்றோரின் தூண்டுதல் ஏதுமின்றி, தானாகவே சிரித்த முகத்துடன் நன்றி சொன்னால், அக்குழந்தை நல்ல முறையில் வளர்க்கப்பட்டுள்ளதென்று நாம் பெருமைப்படுகிறோம்.
ஆனால், வீட்டில் இந்தக் காட்சி கொஞ்சம் மாறும். குழந்தைக்கு அன்னை உணவூட்டி விடுகிறார். ஒவ்வொரு வாய் உணவைப் பெற்றதும், அக்குழந்தை நன்றி சொன்னால் அது செயற்கையாய் இருக்கும். அதற்குப் பதில், ஊட்டப்படும் உணவை அக்குழந்தை இரசித்து உண்பதே அம்மாவுக்கு அக்குழந்தை சொல்லாமல் சொல்லும் நன்றி. சாப்பிட்டு முடித்ததும், இறுதியில் அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்தால் அதுவும் நன்றி சொல்லும் ஒரு வகை.
அப்பா வாங்கித் தந்த ஓர் அழகான உடையைக் கண்டதும், குழந்தை ஓடிச் சென்று அப்பாவை அணைத்து முத்தமிடுகிறது. பின்னர் அந்த உடையை அணிந்து கொண்டு வெளியில் ஓடிச் சென்று தன் நண்பர்களுக்கு அதைக் காட்டி, மூச்சுக்கு மூச்சு 'என் அப்பா வாங்கித் தந்தார்' என்று குழந்தை பறை சாற்றுகிறது. இச்சம்பவங்களில் நன்றி என்ற வார்த்தையைக் குழந்தை நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், குழந்தையின் நன்றியுணர்வு அதன் செயல்களில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. நம் ஒவ்வொருவரது குடும்பங்களிலும் இதுபோல் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடைபெறுகின்றன. குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும் 'நன்றி நவிலல்' என்று ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ இல்லாமல் நன்றி உணர்வுகள் பரிமாறப்படுகின்றன.
இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இத்திருப்பாடலை நோக்கும்போது, தனக்கு இறைவன் செய்த நன்மைகளை ஆசிரியர் ஒவ்வொன்றாகச் சொல்லும்போதே அவரது நன்றியையும் சேர்த்து சொல்கிறார். அந்த நன்றி உணர்வுகளின் ஓர் உச்சமாக அவர் கூறுவது: "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." என்ற இந்த வரி.

நன்றியைப் பற்றிய மூன்றாவது எண்ணம்... நன்றி உணர்வுக்கு ஊற்று, ஆரம்பம், காரணம் நாம் அல்ல; மற்றவர்களே. நம் சொந்த முயற்சிகளுக்கு நமக்கு நாமே நன்றி சொல்வதில்லை. கடினமாய் உழைத்தோம். உழைத்ததற்கேற்றபடி அந்த மாத ஊதியம் கிடைத்தது. "ஊதியம் கிடைத்த எனக்கு நன்றி." என்று சொல்லிக் கொள்கிறோமா? இல்லையே. ஒருவேளை, ஊதியம் தந்த நிறுவனத்தின் தலைவனுக்கு நேரடியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், மனதுக்குள் நன்றி சொல்வோம்... நம்மை இதுவரை அந்த நிறுவனம் பணி செய்ய அனுமதித்ததற்கு.
Thank YOU என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. Thank ME என்று சொல்வதில்லை. ஒரு முயற்சி எடுத்தோம், வெற்றி பெற்றோம். ஒரு ஆபத்திலிருந்து காப்பற்றப்பட்டோம். இவைகளில் நமது முயற்சி, நமது திறமைகள் வெளிப்பட்டாலும், இறுதியில் நாம் Thank God அதாவது, கடவுளுக்கு நன்றி என்றே அதிகம் சொல்கிறோம். நன்றி உணர்வின் மையம் நாமல்ல. நம்மையும் கடந்த ஒரு சக்தி நமக்குப் பின் நின்று நம்மைக் காத்துள்ளது, வழி நடத்தியுள்ளது என்ற உணர்வு நமக்கு எழுகிறதே... அதுதான் நன்றியுணர்வின் அழகு. நன்றியுணர்வின் ஆரம்பம் நாமல்ல; மற்றவர்களும், கடவுளும்...

நன்றி என்ற சொல்லின், உணர்வின் நான்காவது அற்புதம், அழகு என்ன தெரியுமா? அவ்வுணர்வால் அதிக அளவு பயன் பெறுவது நாம்தான். நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு பிறருக்கோ, கடவுளுக்கோ நாம் நன்றி சொல்லும்போது, அதுவும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் உண்மையான நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, அதைக் கேட்கும் மற்றவர்கள் ஒருவேளை, ஓரளவு மகிழலாம். ஆனால், அந்த உணர்வை வெளிப்படுத்தும் நாம் இன்னும் அதிகம் மகிழ்கிறோம், பெருமளவில் பயன் பெறுகிறோம் என்பது உண்மை.
இது மன்னிப்பு வழங்குவதைப் போன்றது என்று சொல்கிறார் Harold Kushner. நாம் மன்னிப்பைப் பெறும்போதும் வழங்கும்போதும் பெருமளவில் நிம்மதி, ஆறுதல் அடைகிறோம். மனக்காயங்கள் ஆறுகின்றன. அதேபோல், உண்மையான நன்றி உணர்வை வெளிப்படுத்தும்போது, பெருமளவில் நிறைவடைகிறோம், பயனடைகிறோம்.

இத்தனை அழகிய அம்சங்கள் கொண்ட நன்றி உணர்வால் நம் உள்ளம் அடிக்கடி நிறையும்போது, வாழ்வின் சிறு, சிறு காரியங்களும் அழகாக மாறும்; இந்த உலகமே அழகாக மாறும்...
இந்த உலகம் அழகாக மாறும் என்று நான் சொன்னதும், “உலகம் அழகாக மாறுமா? இந்த உலகம் அழகாய் மாற வாய்ப்பு ஏதும் உண்டா? நீங்கள் சொல்வதென்ன கனவுலகமா?” என்று உங்கள் மனதில் கேள்விகள் எழுந்தால், அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘உலகம்’ என்ற வார்த்தையைக் கேட்டதும், பயம், சலிப்பு, சந்தேகம் இவைகளே நம்மிடம் அதிகமாய் எழும் உணர்வுகள். ஒவ்வொரு நாளும் இந்த உலகைப் பற்றி செய்திதாள்களும், வானொலியும், தொலைக்காட்சியும் சொல்லும் செய்திகள், இவ்வகைச் சந்தேகக் கண்ணோட்டத்தை நம்மில் உருவாக்கியுள்ளன. உலகின் இருண்ட பகுதிகளையே நாள் தவறாமல் படம் பிடித்து, தலைப்புச் செய்திகளாக்கி நம் ஊடகங்கள் நமக்குச் சொல்வதால், நம் உள்ளங்கள் இப்படி நினைக்கின்றன.
ஊடகத்துறை காட்டும் உலகம் உண்மை உலகம் அல்ல... அல்ல... அல்ல. ஊடகம் காட்டும் இருண்ட உலகம் உண்மையான உலகத்தின் 10 விழுக்காடாக இருக்கலாம். மீதி 90 விழுக்காடு உலகம் நல்ல முறையில் தான் இயங்கிக் கொண்டு வருகிறது. நாள் தவறாமல், இந்த 10 விழுக்காடு உலகத்தையே பார்க்கும்படி ஊடகங்கள் நம்மை வற்புறுத்துகின்றன. அதற்கு ஒரு மாற்றாக, ஒவ்வொரு நாளும் 90 விழுக்காடு நல்ல உலகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது நம் கடமை. பரிதாபமாய் காட்டப்படும் உலகைப் பற்றி படிக்க, பார்க்க நாம் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒதுக்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த 10 விழுக்காட்டு இருள் உலகத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கும் நாம் 90 விழுக்காட்டு நல்ல உலகத்தைப் பற்றி சிந்திக்க குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஒதுக்க வேண்டாமா? ஆனால், நாம் அப்படி செய்வதில்லையே... ஏன்? நல்ல உலகைப் பற்றி சிந்திக்க ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ஒதுக்குங்கள் என்று நான் சொல்லும்போதே, நம்மில் பலருக்கு இது என்ன வேலையற்ற வேலை என்ற எண்ணம் மனதில் ஓடலாம்.

அண்மையில் மின்னஞ்சலில் என் நண்பர் ஒருவர் அனுப்பிய ஓர் அழகான சம்பவம் மனதில் எழுகிறது. ஒரு சிறு கூட்டத்தில் வயது முதிர்ந்த ஒருவர் ஒரு 'ஜோக்' அடித்தார். அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். சிறிது நேரம் கழித்து, அவர் அதே 'ஜோக்'கை மீண்டும் அடித்தார். சூழ இருந்தவர்களில் ஒரு சிலரே மீண்டும் சிரித்தனர். ஆனால் சிரிப்பில் அவ்வளவு தீவிரம் இல்லை. மூன்றாம் முறை, நான்காம் முறை என்று அதே 'ஜோக்'கை மீண்டும் மீண்டும் அடித்தபோது, சூழ இருந்தவர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, சிறிது கோபமடைந்தனர். அப்போது அவர் சொன்னார்: “ஒரு 'ஜோக்'கிற்கு உங்களால் மூன்று, நான்கு முறைகளுக்கு மேல் சிரிக்க முடியவில்லை. ஆனால், ஒரு சோகத்திற்கு மட்டும் மீண்டும், மீண்டும் அழுகிறீர்களே அது ஏன்?” என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தார்.

அதேபோன்றதொரு கேள்வியை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் இந்த உலகம் மோசம் என்பதை நிரூபிக்கும் வகையில் வரும் ஒரே மாதிரியான செய்திகளை மீண்டும் மீண்டும் படிக்கிறோம். உலகம் மோசம் என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். ஆனால், இந்த உலகம் நல்லது என்று சொல்லும் எண்ணங்களை ஏன் நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சொல்லி நம் நம்பிக்கையை வளர்க்கவும், நன்றி உணர்வை வளர்க்கவும் மறுக்கிறோம்?
 மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பழக்க வழக்கங்களின் அடிமைகள்... ஊடகங்கள் சொல்லும் இருளான உலகையேப் பார்த்து, பார்த்து மனக் கண்களின் பார்வைத்திறனைக் குறைத்துக் கொள்வதற்குப் பதில், உலகில் தீமைகளை விட நன்மைகளே அதிகம் என்ற உண்மையை நமக்கு நாமே தினமும் சொல்லப் பழகிக் கொள்வோமே! நமது பாத்திரம், கிண்ணம், நமது உலகம் இறைவனின் அருளால் இன்றும், இன்னும் நிறைந்து வழிகிறது என்று சொல்லிப் பழகினால் என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! நமது பாத்திரம் தொடர்ந்து நிரம்பி வழியும்.







All the contents on this site are copyrighted ©.