2011-02-14 16:15:07

வாரம் ஓர் அலசல் – நிழல் தரும் ஆலமரங்கள்பெற்றோர்


பிப்.14,2011. ஏழு வயதில் குடும்பத்தைப் பிரிந்த மகள், தனது 34வது வயதில் தாய், தந்தையைத் தேடுகிறார்.
அன்பர்களே, இந்தத் தலைப்பில் கடந்த வாரத்தில் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. சேலத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் சித்ரா என்ற ஏழு வயதுச் சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். ஒருநாள் ஓர் இளைஞன் சித்ராவிடம் அவளது தந்தை அழைப்பதாகச் சொல்லிப் பேருந்தில் ஏற்றி விட்டுள்ளார். இராசிபுரம் சென்று சேர்ந்த சிறுமி தாய், தந்தையைக் காணாமல் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அழுது கொண்டிருக்க பாவப்பட்டு சிலர் உதவியிருக்கின்றனர். பின்னர் சித்ராவை, ஒரு மூதாட்டி வளர்த்து திருமணமும் செய்து வைத்திருக்கிறார். இன்று 34 வயதாகும் சித்ரா ஆறு குழந்தைகளுக்குத் தாயாகவும் இருக்கிறார். இப்பொழுது தனது தாய் தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவரது கணவர் இராமசாமியும் இத்தேடலில் உறுதுணையாக இருக்கிறார். எப்படியும் தன் பெற்றோருடன் மீண்டும் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் சித்ரா காத்திருக்கிறார் என்று தினத்தாளில் வாசித்தோம்.

அதேநேரம், ஆந்திர மாநிலத்தில் ஒரு தந்தையும், மகனும் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்துள்ளனர் என்றொரு செய்தியும் அதேத் தினத்தாளில் வெளியாகியிருந்தது. ஆந்திர மாநிலம் வஜ்ரகரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா. இவருக்குத் திருமணமாகி மூன்று மகன்கள் பிறந்தனர். ஆயினும் இவருக்கு 26 வயது ஆன போது, மனநலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு, சின்ன ஆஞ்சநேயலு என்ற பெயரில், ஐந்து மாத கைக்குழந்தை இருந்தது. 1977ம் ஆண்டு பெங்களூருவில் திடீரெனக் காணாமற்போன நாராயணப்பா, 32 ஆண்டுகளுக்குப் பின், 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் காவல்துறையினர் பிடித்து சிறை வைத்தனர். 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம்தேதி விடுதலையான அவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். பலரது முயற்சியின் பயனாக இந்த சனவரி 22ம் தேதி நாராயணப்பா குடும்பத்துடன் இணைந்து விட்டார். தந்தை யார் என்றே தெரியாமல் வளர்ந்த ஆஞ்சநேயலு, 34 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையைக் கண்ட போது நடந்த அந்தச் சந்திப்பு பார்த்தவர் அத்தனைபேர் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது என்று அந்தத் செய்தித்தாள் விவரித்திருந்தது.

இரண்டு வயதில் பெல்ஜியம் சென்றவர் 41 ஆண்டுக்கு பிறகு தாயுடன் இணைந்தார் என்பதும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அன்பர்களே, இன்றைய அவசர உலகத்தில் கூட்டுக் குடும்பங்கள் அரிதாகி வருகின்றன. அதேநேரம் முதியோர் பராமரிப்பு இல்லங்களும் அதிகரித்து அவை பணம் விளையும் இடங்களாகவும் மாறி வருகின்றன. இலண்டனிலிருந்து வெளியாகும் எக்கனாமிஸ்ட் இதழின் ஓர் அங்கமான எக்கனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் பிரிவு, கடந்த ஆண்டு ஜூலையில் ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டிருந்தது. “வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களுக்கானக் கவனிப்புகள்” என்ற தலைப்பில் இந்தியா உட்பட நாற்பது நாடுகளில் இந்தப் பிரிவு நடத்திய ஆய்வில் ஆசியாவில் முதியோர் கவனிப்புக் குறைவு என்று தெரிவித்திருந்தது. பிரிட்டன் முதலிடத்திலும் இந்தியா கடைசி இடத்திலும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இநதியாவில் இளையோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், வளமான வாழ்க்கையைத் தேடி கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இவர்கள் புலம் பெயர்வதால் கிராமங்களில் தங்கியுள்ள வயதானப் பெற்றோரைக் கவனிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இருந்த போதிலும், வயதானப் பெற்றோர் பிள்ளைகளுக்காக ஏங்குவதும் பிள்ளைகளும் பெற்றோர்களுக்காக ஏங்குவதும் இல்லை என்று சொல்ல முடியாது. ஒருவர் சொல்கிறார் : “நான் எனது வேலை காரணமாகப் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறேன். பல நேரங்களில் உணவகங்களில் சாப்பிடுகிறேன். எனது தாய் பாசத்தோடு எனக்கு உணவூட்டிய நாட்களையும் அச்சமயங்களில் நான் அவர்களைக் கஷ்டப்படுத்தியதையும் இப்பொழுது நினைத்துப் பார்த்து வருத்தப்படுகிறேன். ஆனால் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பதற்கு இப்பொழுது எனது தாய் உயிரோடு இல்லை”

மற்றுமொருவர் சொல்கிறார் : “ என்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய என் பெற்றோரைப் புறக்கணித்து விட்டு அமெரிக்காவுக்கு வந்தேன். தள்ளாத வயதில் அவர்கள் தனியே கஷ்டப்படுவதாகச் சொன்ன போதுகூட ஆறு வருடங்களாக அவர்களைப் பிரிந்தே இருந்து விட்டேன். அண்மையில் அப்பா அம்மா இருவரும் அடுத்தடுத்து சில மாத இடைவெளியில் இறந்து விட்டனர். இப்போது குற்ற உணர்வால் தவிக்கிறேன். இதற்குப் பிராயச்சித்தம் உண்டா?” என்று.

இதே அமெரிக்காவில் வாழும் ஒரு மகன் தமிழ் நாட்டில் வாழும் தனது 90 வயது தாயைப் பார்ப்பதற்கு ஆவலாய் இருக்கிறார். அந்தத் தாயும் மகனுக்காக ஏங்குவதையும் கடந்த வாரத்தில் ஊடகம் ஒன்றில் வாசித்தோம். 90 வயதான பாப்பம்மாள் என்ற அந்தத் தாய் சொல்கிறார்

“இந்தியாவில் பிறந்த தனது நான்காவது மகனான முத்துவேல் செல்லையா இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கோரி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார் பாப்பம்மாள். தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா 1978ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் 1978 முதல் 1998 வரை பலமுறை இந்தியா வந்து தனது தாய் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்துச் சென்றிருக்கிறார். ஆனால் 2002ஆம் ஆண்டு இவரது இந்திய கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் இவருக்கு தெரிவித்ததாக அவரே ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்

மேலும் ஒரு மதுரை மாவட்ட பாச மகன் தனது தந்தையும் தாயும் எதிர்நோக்கிய சித்ரவதைகளுக்கு நீதி கேட்டுப் போராடத் தொடங்கியுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற குடியானவரையும் அவரது மனைவி அங்கம்மாளையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. சித்ரவதை தாங்காமல் குருவையா இறந்து விட்டார். அவர் காவல்துறையின் பிடியில் இருந்தபோதே நான்கு காவலர்கள் அவர் கண்முன்னே அங்கம்மாளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அங்கம்மாளின் முதல் மகனான மலைச்சாமி தற்போது இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த போது 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மலைச்சாமி தற்போது சட்டம் படித்த வழக்கறிஞர்.

மேற்கத்திய நாடுகளில் கடைகளில் விற்பனைப் பொருட்களையும் விளம்பரங்களையும் பார்க்கும் போது பிப்ரவரி 14 வரப்போகிறது என்று தெரிந்து விடும்.அன்பை வெளிப்படுத்தும் இந்த பிப்ரவரி 14 ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் இதே நாடுகளில்தான் வயதானவர்களுக்கான முதியோர் இல்லங்கள் அதிகமாகி இருக்கின்றன. இந்த வயதானப் பெற்றோருமே இக்காலக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இதனை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும்கூட இந்த இல்லங்களில் தங்கள் பிள்ளைகள் வந்து தங்களைப் பார்க்கும் நாளுக்காவும் நேரத்துக்காகவும் இவர்கள் ஏங்கிக் காத்திருப்பதை நேரிடையாகக் காண முடிகின்றது. மூப்பு காரணமாக நினைவிழந்தோ அல்லது கோமா நிலையில் அசைவற்றுப் படுத்திருப்பவர்கள்கூட பிள்ளைகளின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் சின்னதாக சலனத்தை வெளிப்படுத்துகிறார்கள். அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்காத இதயங்கள் இருக்கின்றனவா?

வலைத்தளத்தில் வாசித்த ஒரு கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

“ அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
அப்பா இல்லத்தின் அடையாளம்!
அம்மா ஊட்டுவது அன்பு.
அப்பா காட்டுவது மனத்தெம்பு!

நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா-ஆனால்
அந்த உணவை சம்பாதித்துத் தருவது அப்பா என்பதை
மறந்தே போகிறோம்!

கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை ‘அம்மா!’
காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை ‘ஐயோ அப்பா!’
ஏனெனில் சின்னச்சின்னத் துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு!
ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது அப்பாவின் ஆதரவு!

அப்பா ஒரு நெடிய ஆலமரம்! அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’
 பலருக்கு இதம் தரும் ஆலமரம் தாய் என்றால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் வலிமையான வேர் தந்தை. இந்தத் தந்தையின் பெருமை, “சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இணையானவை! ஆம். நிழல் தரும் ஆலமரங்களாகிய தாய் தந்தையரின் அருமை பெருமை உணர்ந்து அவர்களைக் கடைசி வரைக் கண்கலங்காமல் காப்பாற்றுவோம்.







All the contents on this site are copyrighted ©.