2011-02-14 15:52:04

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை


பிப்.14,2011. இயேசு கிறிஸ்து நமக்கு வழங்கிய அனைத்து படிப்பினைகளும் அன்பின் தேவை குறித்த உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது என இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை ஜெப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்.

இறைவனை நம் முழு இதயத்தோடும், நம் அயலார்களை நம்மைப்போலும் அன்பு செய்ய பணித்த அந்த ஒரே கட்டளையில் அனைத்தும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்துள்ளது என்ற பாப்பிறை, குன்றின் மேல் கிறிஸ்து வழங்கிய 'பேறுபெற்றவர்கள்' குறித்த உரைக்குப்பின் இந்த அன்பு கட்டளை வழங்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

அன்பின் முக்கியத்துவம் குறித்து சிந்திக்கும் இவ்வேளையில், உரோம் புறநகர்ப் பகுதியில் கடந்த வாரத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் தங்கள் குடிசைகளில் தீயால் கருகி மாண்டதையும் நினைவுகூரும் நாம், சகோதரத்துவத்தில் மேலும் ஒன்றிணைந்துள்ள, மேலும் கிறிஸ்தவத்தில் வேரூன்றியுள்ள, அன்பில் நிலைத்திருக்கும் ஒரே சமூகமாகிய நாம் இதனை தடுத்திருக்க முடியாதா என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை.

பழைய கட்டளைகளுக்கும் அவை குறித்த தன் விளக்கங்களுக்கும் உள்ள முரண்பாட்டை விளக்கிய இயேசு, 'நீங்கள் இவ்வாறு கேள்விப்பட்டுள்ளீர்கள், ஆனால் நானோ இவ்வாறு கூறுகிறேன்' என அதிகாரத்தோடு கூறியது, இறைவனுடைய அதே அதிகாரத்தை அவர் கொண்டிருந்தார் என்பதையும் அவரே சட்டத்தின் ஆதாரம் என்பதையும் நிரூபித்து நிற்கிறது என்றார் பாப்பிறை.

இயேசுவின் முதல் போதகம் மலைப்பிரசங்கம் என அழைக்கப்படுவதற்கும், இறைவனின் பத்து கட்டளைகள் மோயீசனுக்குச் சீனாய் மலையில் வழங்கப்பட்டதற்கும் இருக்கும் தற்செயலானத் தொடர்பையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.