2011-02-14 16:01:37

இலங்கையின் கிழக்கு மாநிலத்தின் குழந்தைகளுள் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் போதிய சத்துணவின்மையால் வாடுகின்றனர்


பிப்.14,2011. இலங்கையின் கிழக்கு மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுள் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் போதிய சத்துணவின்மையால் வாடுவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 விழுக்காடு, திரிகோணமலையில் 45 விழுக்காடு, அம்பாரையில் 44 விழுக்காடு என குழந்தைகள் சத்துணவின்றி வாடுவதாக உரைக்கும் இலங்கையின் அரசுசாரா அமைப்புகள், WFO, UNICEF மற்றும் ஐ.நா.வின் ஏனைய நலஅமைப்புகள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை இதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குழந்தைகளிடையேயான சத்துணவின்மையை நீக்க யுனிசெஃப் அமைப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கி வந்த பால் வழங்கும் திட்டம் இந்த சனவரியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசுசாரா அமைப்புகள் தெரிவிக்கின்றன.

போர் காலத்தின்போது தங்கள் கணவர்களை இழந்து விதவையானவர்கள் 89,000 பேர் தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்து வருவதாகவும் அண்மை ஆய்வுகளின்போது தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.