2011-02-12 15:40:25

பிப்ரவரி 13, வாழந்தவர் வழியில்...


அளவற்ற ஆண்டுகள் கடந்தாலும்,

இளமை குன்றாத எம் அன்னையே!

இருளை நீக்கி எழுந்து வா! எழுந்து வா!

காலமற்ற உன் கருவிலிருந்து

இன்னும் பல பெருமைகளை நீ ஈன்றேடுப்பாய்!



இந்தியத் தாயின் புகழ் பாடும் இக்கவிதை வரிகளை வடித்தவர் இந்தியக் குயில் என்று புகழ் பெற்ற சரோஜினி நாயுடு. இவர் 1879ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி பிறந்தார். குழந்தையாய் இருந்தபோதே, பிரமிக்கத்தக்க அறிவு பெற்றிருந்தார் இவர். பள்ளி இறுதித்தேர்வில், மெட்ராஸ் பிரெசிடென்சி என்று வழங்கப்பட்ட தென்மாநில அளவில், முதலிடம் பெற்றார். அப்போது அவருக்கு வயது 12. தனது 16ம் வயதில் இவர் மேற்படிப்புக்கு லண்டன் சென்றார்.
ஆங்கிலம், இஸ்பானியம், பாரசீகம், வங்காளம், உருது, தெலுங்கு ஆகிய அனைத்து மொழிகளிலும் புலமை பெற்றவர் சரோஜினி. தனது 26ம் வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியுடன் இணைந்தார். இந்தியாவின் பல நகரங்களுக்கும் சென்று, இளையோர் நலன், உழைப்பின் உயர்வு, பெண் விடுதலை, நாட்டுப் பற்று ஆகிய கருத்துக்களில் பல உரைகள் நிகழ்த்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே. இந்தியா விடுதலை பெற்ற இரண்டாம் ஆண்டு - 1949ல் தனது 70வது வயதில் இவர் காலமானார். இசையுடன் பாடக்கூடிய பல கவிதைகளை இவர் இயற்றினார். எனவே, இவர் இந்தியக் குயில் என்று பெயர் பெற்றார்.







All the contents on this site are copyrighted ©.