2011-02-12 15:28:34

திருத்தந்தை : குருத்துவத்தின் மகிமையும் மகிழ்ச்சியும் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பணி செய்வதாகும்


பிப்.12,2011. குருத்துவத்தின் மகிமையும் மகிழ்ச்சியும் கிறிஸ்துவுக்கும் அவரது மறையுடலாம் திருச்சபைக்கும் பணி செய்வதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

புனித சார்லஸ் மறைபோதகர்களின் சகோதரத்துவ குருக்கள் அமைப்பின் பொது அவையில் பங்கு பெற்ற 400 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருச்சபையின் வாழ்வில் திருநிலைபடுத்தப்பட்ட குருக்களின் இடம் என்ன? ஒன்றிணைந்த குழு வாழ்வில் குருக்களின் அனுபவம் என்ன? ஆகிய இரண்டு கருத்துக்கள் குறித்துத் தான் விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

குருத்துவம் கிறிஸ்துவின் நித்திய குருத்துவத்தின் அங்கம் என்பதால் இந்த வாழ்வுக்கான அழைத்தல், திருச்சபையில் மிக நேர்த்தியான மற்றும் தனித்துவம் கொண்ட அழைப்பு என்று கூறிய அவர், உண்மையான மற்றும் பலனுள்ள குருத்துவம் இன்றி திருச்சபையில் உண்மையான வளர்ச்சி இருக்காது என்று கூறினார்.

இவ்வேளையில் குருத்துவப் பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள அனைவர்க்கும் தனது நன்றியைத் தெரிவித்தத் திருத்தந்தை, திருச்சபை முழுவதிலும் குருத்துவ வாழ்வு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்தப் புதுப்பித்தலுக்குச் செபம், தியானம், புனிதர்களின் போதனைகள், குறிப்பாகத் திருச்சபைத் தந்தையரின் போதனைகளைத் தியானித்தல், திருவருட்சாதன வாழ்வைப் பிரமாணிக்கத்துடன் வாழ்தல் போன்றவை இன்றியமையாதவை என்றும் திருத்தந்தை கூறினார்.

குருக்கள் குழுவாக வாழ்வதன் நன்மை குறித்து புனித சார்லஸ் சகோதரத்துவ அமைப்பு கோடிட்டுக் காட்டுகிறது என்றுரைத்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தூதர்களின் அனுபவம் குருத்துவ வாழ்வுக்கு புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருக்கட்டும் என்றும் வாழ்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.