2011-02-12 15:30:50

தலத்திருச்சபை : எகிப்தியர்கள் நல்லதோர் வருங்காலத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்


பிப்.12,2011 எகிப்து மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் நல்லதோர் எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்று அந்நாட்டு அலெக்ஸாண்டிரிய காப்டிக் ரீதிக் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறினார்.

எகிப்து நாட்டை முப்பது வருடங்களாக ஆட்சி செய்த 82 வயது அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி 18 நாட்களாக நடைபெற்ற பொது மக்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் முபாரக் தான் பதவியைத் துறப்பதாக இவ்வெள்ளி இரவு அறிவித்தார். இதையொட்டி மக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர் மற்றும் பட்டாசுகளைக் கொளுத்தித் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். தற்சமயம் நாடு பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் இராணுவ உயர் அதிகாரிகளின் கைகளில் இருக்கின்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு ZENIT செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கர்தினால் Naguib, ஒவ்வொரு குடிமகனும் நாட்டில் ஒன்றிணைக்கப்படுவதற்குத் தேசியத் தோழமையுணர்வும் உறுதியான உரையாடலும் அவசியம் என்றார்.

சமுதாய வாழ்வில் பொதுமக்களை ஆர்வமுடன் பங்கெடுக்கத் தூண்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு இருக்கும் வாக்களிக்கும் கடமையையும் மற்றும் பிற தேசியக் கடமைகளையும் நினைவுபடுத்த வேண்டும் என்றும் கர்தினால் கூறினார்.

மேலும், ஐ.நா.பொதுச் செயலர், அமெரிக்க அதிபர் உட்பட பல தலைவர்கள் முபாரக்கின் பதவி விலகலை வரவேற்றிருப்பதோடு நாட்டில் சனநாயகம் அமைய வலியுறுத்தியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.