2011-02-12 15:49:15

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
தொடர்ந்து, மூன்றாவது வாரமாக நாம் இயேசுவின் மலைப்பொழிவைச் சிந்திக்க வந்திருக்கிறோம். சென்ற வாரம் நமது சிந்தனைக்கு இயேசு கூறிய இரு உருவகங்களைச் சிந்தித்தோம். உப்பும், விளக்கும். இந்த வாரம் நமது சிந்தனைகளை வேறு இரு உருவகங்களுடன் ஆரம்பிப்போம். நீரும், நெருப்பும். இன்றைய முதல் வாசகம் இந்த உருவகங்களை நமக்குத் தருகிறது. சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மிக எளிய வார்த்தைகளில் அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களை நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் முதல் பகுதியை மட்டும் இப்போது கேட்போம்.

சீராக்கின் ஞானம் 15 15-17
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். 
வாழ்வு என்பது நாம் விரும்பித் தேர்ந்து கொள்வது... கட்டாயங்கள், நிர்ப்பந்தங்கள் இங்கில்லை என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லமுடியுமா? நீரா, நெருப்பா... எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா... எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான விடைகளை எளிதில் சொல்லிவிடலாம். நெருப்பை எடுப்பதை விட, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவை விரும்புவதை விட வாழ்வை விரும்புவதே மேல் என்றும் நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில் நம்மை அறிவு மட்டும் வழிநடத்துவது இல்லையே. உறவுகள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று வேறு பல அம்சங்களும் நம்மை வழிநடத்துகின்றனவே. சுடும் என்று தெரிந்தும், புண்படுவோம் என்று தெரிந்தும், நெருப்பைத் தேடிச் சென்ற நேரங்களை, நெருப்பை கைநீட்டி எடுத்த நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு எப்போதும் பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகைத் தேடி குழந்தை ஒன்று தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம் பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பது இல்லை. ஆனால், நெருப்பையொத்த எத்தனை ஆசைகள் நம்மை ஈர்த்துள்ளன? எத்தனை முறை நாம் அந்த ஈர்ப்பினால் நெருப்புடன் விளையாடி புண்பட்டிருக்கிறோம்? வாழ்வின் எத்தனைப் பகுதிகள் நெருப்பில் சாம்பலாகியுள்ளன? இயற்கையில், இறைவனின் படைப்பு என்ற வகையில் நீர், நெருப்பு இரண்டும் நல்லவைகளே. ஆனால், அவைகளை நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து, நன்மை விளையலாம்; தீமையும் விளையலாம். நெருப்பும், நீரும் நமக்கு முன் இருக்கும்போது, கைநீட்டி நாம் எடுத்துக்கொள்ள நீரே நல்லது. நெருப்போடு விளையாட வேண்டாம். நெருப்போடு விளையாடும் பலரை, சிறப்பாக இளையோரை, இந்நேரத்தில் நினைத்து அவர்கள் தங்கள் விபரீத போக்குகளை விட்டு நல்வழி வந்து சேர வேண்டுவோம்.

சீராக்கின் ஞானம் தரும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்ப முடியும்? வாழ்வைத் தான் விரும்ப வேண்டும் என்று எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து சிறந்ததொரு மறையுரையாளரான Walter Burghardt என்ற இயேசுசபை குரு கூறும் விளக்கம் இந்தக் கேள்வியை மற்றொரு கோணத்தில், இன்னும் சிறிது ஆழமாய் பார்க்க உதவும்.

சீராக் கூறும் வாழ்வு மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற உடல் செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டவை அல்ல. இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரை, சீராக்கைப் பொறுத்தவரை, இறைவன் மீது பற்று கொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், அவர் கூறும் சாவு நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்கள் சாக முடியும். இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சு விடும் நடைபிணங்களே. எனவே சீராக் வாழ்வையும், சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார் என்று விளக்குகிறார் Walter Burghardt.

இறைவனின் வழி வாழ்வதை இஸ்ரயேல் மக்களில் பலர் இறை சட்டங்களின் படி, மோசே தந்த சட்டங்களின்படி வாழ்ந்தால் போதும் என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர். மோசேயின் சட்டங்களையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக்கொள்ள முயன்றனர். எனவே, குருட்டுத்தனமாய் சட்டங்களைப் பின்பற்றி அவர்கள் வாழ்ந்த வாழ்வு வெறும் மூச்சு விடும் நடைபிணங்களின் வாழ்வு என்பதை இயேசு தன மலைப்பொழிவில் தெளிவுப்படுத்தினார்.

"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்று இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று இயேசு கூறிய இந்த வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏதோ ஓர் ஊரிலிருந்து திடீரென வந்த இந்த தச்சனின் மகன் மோசேயின் சட்டத்தை மாற்றி எழுதுகிறாரே என்று கேள்விகள் எழுந்திருக்கலாம். கோபம் கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம்.

அதனால், இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் இயேசு தன நிலையைத் தெளிவுபடுத்துகிறார். சட்டங்களை அழிக்க தான் வரவில்லை. அவற்றை நிறைவேற்றவே வந்துள்ளேன் என்று கூறுகிறார். சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள அதன் ஆன்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். மோசே கூறிய சட்டங்களை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார். ஒரே ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதை நாம் உணர முயல்வோம். காணிக்கை பற்றிய மோசேயின் சட்டங்களை இயேசு எவ்விதம் எண்ணிப்பார்க்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

மோசேயின் காணிக்கைச்சட்டங்கள் கோவிலுக்குக் கொண்டுவரப்படும் காணிக்கைகளைப் பற்றியே அதிகம் பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக் குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்க வேண்டும் என்பவைகளே மோசேயின் சட்டங்களாய் இருந்தன. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறத்தில் உன் கைகளில் ஏந்தி வரும் காணிக்கைகள் ஒரு புறம் இருக்கட்டும். காணிக்கை செலுத்த வந்த உன் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார்.

காணிக்கை என்பது நமக்குப் பதிலாக அளிக்கப்படும் உயிர்கள், பொருட்கள். நமக்குப் பதிலாய் அளிக்கப்படும் அவை சரியாக உள்ளனவா என்பது மட்டும் முக்கியமல்ல. அவைகளைச் செலுத்தும் நாமும் சரியாக இருக்கிறோமா என்பது முக்கியம். காணிக்கையை ஏற்கவிருக்கும் கடவுளின் கண்களில் காணிக்கைப் பொருட்களை விட, காணிக்கை செலுத்தும் நாம்தான் மிகவும் முக்கியம். இந்தச் சவாலை நம் முன் வைக்கிறார் இயேசு.

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும் போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... நம் சகோதரர் சகோதரிகள் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருந்தாலே நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்ல வேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று சொல்கிறார்.
சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால்... என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் இப்படி இருந்திருக்கும். நீ மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டாம். முதலில் நல்லுறவைப் பற்றி சிந்தித்து, செயல்படு. பின்னர் உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கை செலுத்துவதற்கு முன் பிறருடன் நல்லுறவு கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் இந்த ஒரு கூற்றை மட்டும் உண்மையில் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் நம் திருப்பலி நேரங்களில் விழைந்தால், நமது இன்றைய ஞாயிறுத் திருப்பலியை இப்போதே நிறுத்த வேண்டியிருக்கும். நீங்களும், நானும், ஏதோ ஒரு வகையில் மனத்தாங்கல்களைச் சுமந்து இப்போது வந்திருக்கிறோம்.
நமது காணிக்கையைச் செலுத்தும் முன் பிறருடன் ஒப்புரவு பெற வேண்டும். சரி, அது இப்போது முடியாத பட்சத்தில், அதற்கடுத்த நிலையையாவது நாம் தேட வேண்டும்... அதாவது, நமது மனத்தாங்கலை தீர்க்கும் ஓர் அவலை நாம் பெறுவதற்கு, ஒரு நல்லுறவு முயற்சியை நாம் எடுப்பதற்கு இறைவன் இன்று நமக்கு அருள் தர வேண்டும் என்று செபிப்போம்.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, இன்றைய நற்செய்தி முழுவதும் இயேசு எடுத்துக்காட்டும் மோசேயின், இஸ்ரயேலின் பல சட்டங்களும் வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு கூறும் சவால்கள் நமது அந்தரங்கத்தை, உள்புரத்தைச் சார்ந்தவை.
தொடர்ந்து மூன்றாம் வாரமாய் இயேசு தன் மலைப்பொழிவின் மூலம் சவால்களை நம்முன் வைக்கிறார். இப்படியும் வாழ முடியுமா என்ற கேள்வியை, பிரமிப்பை எழுப்பும் சவால்கள். இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை எழுப்பும் சவால்கள். நல்லவைகளுக்காக நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நம்மைப் புனிதத்திற்கு அழைத்துச் செல்லும் படிகற்கள்.







All the contents on this site are copyrighted ©.