2011-02-12 15:45:30

சிவகங்கையில் திறந்தவெளி சிறை: ஏப்ரலில் திறப்பு: 150 கைதிகள் தேர்வு


பிப்.12,2011. சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில், 87 ஏக்கரில் கட்டப்படும் திறந்தவெளி சிறை வருகிற ஏப்ரலில் திறக்கப்படும். இதற்காக விருப்பமான கைதிகள் 150 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி சிறை என்பது, முள்வேலி அமைக்கப்பட்ட நிலத்திற்குள் கைதிகள் விவசாயம் செய்து, பயிர் உற்பத்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் கைதிகளுக்கு மனஅழுத்தம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, சேலத்தில் இச்சிறை உள்ளது. தென்மாவட்டங்களுக்கென சிவகங்கை - இளையான்குடி சாலையில் திறந்தவெளி சிறை அமைக்கப்பட்டு அதைச் சுற்றி, மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியவாயில் பகுதியில் சுற்றுச் சுவர் கட்டப்படவுள்ளது. இங்கு முந்திரி மரங்கள் அதிகம் இருப்பதால், அதை அதிகளவில் சாகுபடி செய்ய சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், அனைத்து வகைப் பயிர்களும் சொட்டு நீர் பாசன முறையில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இச்சிறை திறப்பு விழா ஏப்ரலில் நடக்கிறது. திறந்தவெளி சிறையில் தங்கி, பயிர் உற்பத்தி செய்ய, ஐந்தாண்டு முதல் பத்தாண்டு தண்டனை அனுபவிக்கும், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, விருப்பமுடைய கைதிகள் 150 பேர் அனைத்துச் சிறைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.