2011-02-12 15:40:12

ஈராக் பேராயர் : இசுலாம்மயமாதல் முன்வைக்கும் அச்சுறுத்தலை மேற்கத்திய உலகால் புரிந்து கொள்ள முடியாது


பிப்.12,2011. உலகாயுதப் போக்கு கொண்ட மேற்கத்திய உலகு, “இசுலாமின் மறுஎழுச்சி” மத்திய கிழக்குப் பகுதியில் முன்வைக்கும் அச்சுறுத்தலை முழுமையாகப் புரிந்து கொள்ள திறமையின்றி இருக்கின்றது என்று ஈராக் பேராயர் ஒருவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்குப் பகுதியில் பரவலாக இடம் பெறும் பதட்டநிலைகளின் விளைவுகள் குறித்து இத்தாலிய ஆயர் பேரவையின் SIR செய்தி நிறுவனத்திடம் விளக்கிய கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ, இசுலாமிய சக்திகளும் இயக்கங்களும் மத்திய கிழக்குப் பகுதியை ஷாரியா சட்டங்கள் ஆட்சி செய்யும் இசுலாமிய நாடுகளாக மாற்றுவதற்கு விரும்புகின்றன என்றார்.

ஈராக்கில் செயல்படும் அல-கெய்தா, அன்சார் அல் இசுலாம் போன்ற இசுலாம் தீவிரவாதக் குழுக்கள், பிற மத்திய கிழக்கு நாடுகளில் இசுலாமியத் தாக்கத்தை ஏற்படுத்துமாறு அந்நாடுகளின் குடிமக்களைத் தூண்டி வருகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

மேலும், எகிப்தில் இடம் பெற்ற போராட்டங்கள் அந்நாட்டின் மிகுதியான சமூக வறுமை மற்றும் அரசியல் நிலைகளுக்கு எதிராக நடந்திருந்தாலும், முஸ்லீம் சகோதரத்துவம் போன்ற அமைப்புமுறை இசுலாமியக் கழகங்கள் இந்தக் குழப்பத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகின்றன என்ற அச்சமும் இருப்பதாக ஈராக் பேராயர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.