2011-02-11 16:27:06

மலேசியாவில் வலெண்டைன் தினம் குறித்த அறிக்கைக்குக் கிறிஸ்தவர்கள் வருத்தம்


பிப்.11,2011. வலெண்டைன் தினத்தை பாவம் மற்றும் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்தி அண்மையில் மலேசியாவில் பொதுவில் வெளியாகியுள்ள அறிக்கைகள் தங்களைப் புண்படுத்தியிருப்பதாக அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் இசுலாம் மதப் பேச்சாளர் Siti Nor Bahyah Mahamood, தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்கள் குறித்து மலேசிய கிறிஸ்தவக் கூட்டமைப்பும் மலேசியக் கிறிஸ்தவ சபைகள் அவையின் இளையோர் அமைப்பும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

இது குறித்து மலேசியக் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட மத சமூகத்திற்கு எதிராக வெறுப்பையூட்டுவது சகித்துக் கொள்ள முடியாதது என்றும் இவ்விழா திருச்சபையில் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவ்விழா, மேலைநாட்டுக் கலாச்சாரத்தோடு தொடர்புடையது என்றும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கோலாலம்பூர் உயர்மறைமாவட்ட பல்சமய பணிக்குழுவின் அருட்தந்தை Michael Chua கூறினார்.

“வலெண்டைன் தினம் : இசுலாத்தில் தடை” என்ற தலைப்பில் உரையாற்றிய Siti, பிப்ரவரி 14ம் தேதி வலெண்டைன் தினக் கொண்டாட்டங்களில் முஸ்லீம் இளையோர் பங்கெடுக்க வேண்டாமென்று எச்சரித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.