2011-02-10 16:13:36

பிரெஞ்ச் அரசுத்தலைவருக்கு World Social Forum அனுப்பியுள்ள அழுத்தமான செய்தி


பிப்.10,2011. தங்கள் நாட்டில் வரி செலுத்துவதற்குப் பதில் அந்நிய நாட்டில் பணத்தைச் செலுத்துவோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமான ஒரு செய்தி பிரெஞ்ச் அரசுத் தலைவர் Nicolas Sarkozy க்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிரான்சில் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள G20 மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட வேண்டுமென இப்புதனன்று World Social Forum வலியுறுத்தியுள்ளது.

ஆப்ரிக்காவின் Senegal நாட்டில் கடந்த ஞாயிறு முதல் இவ்வெள்ளி வரை நடைபெறும் WSF கூட்டத்தில், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்பட வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமல் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களின், பெரும் செல்வந்தர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டுமென்று இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Christian Aid, ActionAid, Tax Justice Network Africa ஆகிய பல்வேறு மனிதநல அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டுள்ள இம்முயற்சி வெற்றி அடைய வேண்டும் என்று Christian Aid அமைப்பின் ஆலோசகர் முனைவர் David McNair கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் இந்நிறுவனங்கள், செல்வந்தர்கள் செலுத்தாமல் விடும் வரிப்பணம் 1600 கோடி டாலர்கள் என்றும், இவைகளைக் கொண்டு உலகின் பல்வேறு சமுதாய முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று David McNair மேலும் கூறினார்.

பிரெஞ்ச் அரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தி இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை வலியுறுத்த விழைவோர் இவ்விணையதளத்தின் மூலம் தங்கள் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் WSF கூறியுள்ளது. இவ்விணையதளத்தின் முகவரி: www.endtaxhavensecrecy.org








All the contents on this site are copyrighted ©.