2011-02-10 15:45:46

பிப்ரவரி 11 - வாழ்ந்தவர் வழியில்.....


தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்.18, 1931)

காது சரியாகக் கேளாத அந்தச் சிறுவன் அன்று அவனுடைய ஆசிரியர் எழுதிக் கொடுத்த சீட்டைக் கொண்டு வந்து தன் அம்மாவிடம் கொடுத்தான். உங்கள் பையன் படிப்பதற்குத் தகுதியற்றவன். ஆகவே அவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அதில் ஆசிரியர் எழுதி இருந்தார். இதைப் படித்துப் பார்த்த அம்மா சற்றே அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் சோர்வடையவில்லை. தானே மகனின் படிப்பில் அக்கறை காட்டி, கூடவே இருந்து பொறுமையாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். அவனைச் சிறந்த அறிவாளியாகவும் ஆக்கினார். அந்தச் சிறுவன்தான் உலகப் புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன். இவர் 1847ம் வருடம் பிப்ரவரி 11ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிலார் எனும் நகரத்தில் பிறந்தார். இவர் ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். எட்டு வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்தவர். 1880ல் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 மாம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் பத்திரிகை ஆனது. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அசையும்பட உரிமக் கம்பனியை ஆரம்பித்தவர். மின்விளக்கைக் கண்டுபிடித்தவர். இவர் 1931ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி இறந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார் - நான் எங்கே தோல்வி அடைந்தேன்? வெற்றியை அளிக்காத பத்தாயிரம் வழிகளை அல்லவா கண்டறிந்திருக்கிறேன் என்று.








All the contents on this site are copyrighted ©.