2011-02-10 16:05:44

இறையழைத்தலுக்கான அகிலஉலக செப நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள சிறப்புச் செய்தி


பிப்.10,2011. இயேசு தன் சீடர்களை அழைத்ததும், அவர்களைத் தன்னோடு பணிகளில் ஈடுபடுத்தியதும், இறையழைத்தலை எவ்விதம் நாம் வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.

வருகிற மே மாதம் 15ம் நாள் ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் இறையழைத்தலுக்கான அகில உலக செப நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள சிறப்புச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

தலத் திருச்சபையில் இறையழைத்தலை உருவாக்குதல் என்ற கருத்தில் வருகிற மே மாதம் சிறப்பிக்கப்படும் இந்த இறையழைத்தல் செப நாள், அகில உலகத் திருச்சபையில் 48 ஆண்டுகளாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

எழுபது ஆண்டுகளுக்கு முன் அப்போது திருத்தந்தையாக இருந்த வணக்கத்திற்குரிய பனிரெண்டாம் பத்திநாதர் குருத்துவ அழைத்தலுக்கென உருவாக்கிய திருப்பீடச் சேவையைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு மறைமாவட்டங்களில் இறையழைத்தலை வளர்க்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருத்தந்தை தன் சிறப்புச் செய்தியில் கூறியுள்ளார்.

இயேசு தன் பணி வாழ்வை துவக்கும் நேரத்தில் எளிய மீனவர்களை தன் பின்னே வருமாறு அழைத்தார்; அவர்களுக்குப் படிப்படியாக தன் மீட்புப் பணிகுறித்த பல பாடங்களைச் சொல்லித் தந்தார்; இறுதியில் தன் நேரம் நெருங்கியது என தெரிந்ததும், தன் பணியைத் தொடரும்படி அவர்களுக்குப் பணித்தார் என்ற கருத்துக்களைத் தன் செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.

நாம் வாழும் இக்காலச்சூழலில் இயேசு "என் பின்னே வாருங்கள்" என்று விடுக்கும் அழைப்பு, உலகில் ஓங்கி ஒலிக்கும் பிற சப்தங்களில் அடங்கிப் போக வாய்ப்புக்கள் அதிகம் உண்டு, எனவே இன்றையச் சூழலில் இயேசுவின் குரலைக் கேட்பதும் அவரது வழியைப் பின்பற்றுவதும் பெரும் சவால்களாக வளர்ந்து வருகின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இச்செய்தியின் ஒரு பகுதியில் தன் சகோதர ஆயர்களுக்குச் சிறப்பான முறையில் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை. ஆயர்கள் தங்கள் மறைமாவட்டங்களில் குருத்துவ வாழ்வுக்கும், துறவற வாழ்வுக்குமான இறையழைத்தலை கவனமாய் வளர்க்க வேண்டும்; இறையழைத்தல் பணியில் ஈடுபடுவோரை அக்கறையுடன் தேர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்; மற்றும், தங்கள் தலத் திருச்சபையின் தேவைகளை மட்டும் மனதில் கொள்ளாமல், உலகளாவியத் திருச்சபைக்கும் குருக்களும், துறவறத்தாரும் உழைக்க வேண்டுமெனும் கண்ணோட்டத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று திருத்தந்தை ஆயர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.