2011-02-09 15:39:10

பிப்ரவரி 10. – வாழ்ந்தவர் வழியில்........,


1918ம் ஆண்டு பிப்ரவரி 10ந்தேதி காலமானார் இத்தாலிய எழுத்தாளரும், தேசியவாதியும், அமைதி நடவடிக்கையாளருமான எர்னஸ்தோ தெயோதொரோ மொனெத்தா. இவரைப்பற்றி அப்படியென்ன விசேடம் என்று கேட்கிறீர்களா? புரட்சிகர ராணுவ வீரரான இவர் அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றதுதான் இங்கு குறிப்பிடும்படியானது. இத்தாலியின் மிலான் நகரைச் சேர்ந்த மொனெத்தா, தன் 15வது வயதிலேயே ஆஸ்திரிய ஆட்சிக்கு எதிரான 5 நாள் கிளர்ச்சியில் கலந்து கொண்டு தன் தேசியவாதத்தை வெளிப்படுத்தினார். இத்தாலியை ஒரே நாடாக இணைத்த ஜுசப்பே கரிபால்டியின் படையில் சேர்ந்து ஆஸ்திரியாவுக்கு எதிராகப் போரிட்டார் மொனெத்தா. போர்க்காலத்தில் இவர் நேரடியாகக் கண்ட துன்ப துயரங்கள், அமைதிக்கானப் பணிகளுக்கு இவரை அர்ப்பணிக்க வைத்தது. 1887ம் ஆண்டு இத்தாலியின் லொம்பார்தி மாகாணத்தில் அமைதி இயக்கம் ஒன்றைத் துவக்கி நாடுகளிடையே ஆயுதக் களைவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த இயக்கத்தின் தூண்டுதல் தான், பின்னாளில் ஐ.நா. என்று அழைக்கப்பட்ட 'நாடுகளின் கூட்டமைப்பு' உருவாக காரணமாக இருந்தது. 1907ம் ஆண்டு அமைதிக்கன நொபெல் விருதைப்பெற்றார் மொனெத்தா.








All the contents on this site are copyrighted ©.