2011-02-08 15:50:05

விவிலியத் தேடல்


RealAudioMP3
"என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."
திருப்பாடல் 23ன் 5ம் திருவசனத்தில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். புத்தாண்டு புலர்ந்துள்ள இந்த வேளையில் நாம் மேற்கொள்ளும் முதல் விவிலியத் தேடலில் இத்திருவசனம் மனதில் இதமான எண்ணங்களை உண்டாக்குகிறது.
இப்போது நாம் கேட்டது இவ்வாண்டின் துவக்கத்தில் நாம் மேற்கொண்ட முதல் விவிலியத் தேடலின் ஆரம்பம். கடந்த ஐந்து வாரங்களாய் திருப்பாடல் 23ன் ஐந்தாம் திருவசனத்தில் நம் தேடலைத் தொடர்ந்துள்ளோம். இன்று இத்திருவசனத்தின் இறுதி வரியில் நமது தேடலை ஆரம்பிக்கிறோம்… "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."

நிரம்பி வழியும் பாத்திரம் அல்லது கிண்ணம் பல மதங்களில், பல கலாச்சாரங்களில் ஆழமான கருத்துக்களைச் சொல்லும் ஓர் அடையாளம். நிரம்பி வழியும் பாத்திரம் என்றதும், பொங்கல் திருநாளில் முழவதும் நிறைந்து, பொங்கி வழியும் பொங்கல் பானை மனதில் தோன்றுகிறது. புதுமனை புகுவிழாவில் பொங்கி வழியும் பால் பாத்திரம் மனதில் தோன்றுகிறது. அள்ள, அள்ள குறையாத அமுதசுரபியும் நிரம்பி வழியும் ஒரு பாத்திரம் தானே. விவிலியத்தில் அரசர்கள் இரண்டாம் நூல் 4ம் பிரிவில் (2 அரசர்கள் 4: 1-7) இறைவாக்கினர் எலிசாவின் ஆசீரால் ஏழை கைம்பெண்ணின் வீட்டில் இருந்த அனைத்து பாத்திரங்களிலும் எண்ணெய் நிறைந்த சம்பவம் மனதில் எழுகிறது. யோவான் நற்செய்தி இரண்டாம் பிரிவில் (யோவான் 2: 1-11) வரும் கானாவூர் திருமணத்தில் விளிம்பு வரை நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்த நீர் இனிய திராட்சை இரசமாக மாறியது நினைவுக்கு வருகிறது.

நிரம்பி வழியும் பாத்திரம் அல்லது கிண்ணம் என்ற அடையாளத்தின் பின்னணியில் அதிகம் போதிந்திருப்பன... ஆசீர்வாதங்கள், மனநிறைவு, நன்றி ஆகிய உயர்ந்த எண்ணங்கள். மனித உணர்வுகளில் மிக உயர்ந்ததோர் இடத்தில் இருப்பது நன்றி உணர்வு. எனவே உலகின் எல்லா மதங்களிலும் இந்த உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், மதங்களின் உயிர்நாடிகளில் ஒன்று நன்றி.
உண்மையான நன்றி ஒப்புக்காக, சடங்காக சொல்லப்படும் வெறும் வாய் வார்த்தை அல்ல. இது ஒரு மனநிலை. நாம் உலகைப் பார்க்கும் பார்வை எப்படிப்பட்டதென்று சொல்லும் ஒரு மன நிலை இந்த நன்றி உணர்வு.
நன்றியை இரு பக்கங்கள் கொண்ட ஒரு நாணயமாக சிந்திக்கலாம். அந்நாணயத்தின் இரு பக்கங்கள் - பெறுவதும் தருவதும் அல்லது, எடுப்பதும். கொடுப்பதும்... இவ்விரண்டும் பிரிக்க முடியாதவை. நன்மையொன்றைப் பெறுகிறோம். நன்றியைத் தருகிறோம்.

"நன்றி நிறைந்திருப்பது, செபத்தின் மையம்" (Gratefulness, the Heart of Prayer) என்பது Benedictine சபையைச் சார்ந்த சகோதரர் David Steindl-Rast என்பவர் எழுதிய ஒரு நூல். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள ஓர் அழகான கருத்து இது...
நாம் மேற்கொள்ளும் பல செயல்களுக்கு ஆங்கிலத்தில் 'take' அதாவது எடுத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். We take a trip, we take a vacation, we take an exam, we take medicines… தமிழிலிலும் சில சமயங்களில் நாம் விடுமுறை எடுத்தல், ஓய்வெடுத்தல், முயற்சியெடுத்தல் போன்ற 'எடுத்தல்' சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எடுப்பதாக நாம் கூறும் எந்த ஒரு செயலிலும் நாம் கொடுக்கவும் செய்கிறோம். நாம் விடுமுறை எடுக்கிறோம் சரி... ஆனால், அந்த விடுமுறையைச் சரியாக எடுக்க, நமது நேரத்தைக் கொடுத்து, அறிவாற்றலைக் கொடுத்து திட்டமிட்டு, பயணங்கள் மேற்கொள்ளாவிட்டால், விடுமுறையை எடுக்க முடியாது. அதேபோல், நமது நேரத்தைக் கொடுத்தால் தான் ஓய்வை எடுக்க முடியும். முயற்சி எடுப்பதற்கு நமது சக்தியைக் கொடுக்க வேண்டும். எனவே, வாழ்வில் கொடுக்காமல் நம்மால் எதையும் எடுக்க முடியாது. தராமல் எதையும் பெற முடியாது.

வாழ்க்கை முழுவதுமே நாம் பெற்றுள்ள, அல்லது நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு கோடை. “இறைவன் இன்று உனக்கு 86,400 நொடிகள் என்ற கொடைகள் கொடுத்துள்ளார். அவைகளில் ஒரு நொடியையாவது பயன்படுத்தி 'உமக்கு நன்றி' என்று சொன்னாயா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் William A. Ward.
அன்புள்ளங்களே, இன்று நேரம் கிடைத்தால்... இல்லை, இல்லை. இன்று முயற்சியெடுத்து, நேரம் எடுத்து அல்லது சிறிது நேரம் ஒதுக்கி நான் சொல்லவிருப்பதைச் செய்து பாருங்கள். அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். அது உங்கள் அலுவலக அறையாக இருக்கலாம், உங்கள் வீட்டின் ஓர் அறையாக இருக்கலாம். அல்லது வெளிப்புறத்தில் ஒரு பூங்காவாக, அல்லது நீங்கள் பயணம் செய்யும் வாகனமாக இருக்கலாம். இடம் முக்கியமல்ல. அங்கு நீங்கள் உருவாக்கவிருக்கும் மனம், சூழ்நிலை முக்கியம். நீங்கள் தேர்ந்துள்ள இந்த இடத்தில் தனியே அமர்ந்து, உங்களைச் சுற்றியுள்ள பொருட்களை, நபர்களைப் பாருங்கள். ஒவ்வொரு பொருளின் மீது, ஒவ்வொரு நபரின் மீது உங்கள் கண்கள் பதியும்போது, இவைகள், இவர்கள் நமக்குக் கிடைத்த அன்பளிப்புகள், நாம் கேட்காமலேயே நமக்குத் தரப்பட்ட அன்பளிப்புகள் என்பதை உணர்ந்து பாருங்கள். உள்ளம் பெருமளவில் நிறைவு பெறும். ஒவ்வொரு நாளும் இரவில் உறங்கப் போகும் முன் அன்றைய நாள் முழுவதையும் நம் மனக்கண் முன் ஓடவிட்டு, நாம் சந்தித்த நபர்கள், பெற்ற அனுபவங்கள் ஒவ்வொன்றையும் மெதுவாக அசைபோட்டு, அவைகளுக்காக, அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொன்னால், மன நிறைவோடு நாம் உறங்கலாம்.

வாழ்வில் நன்றி சொல்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. பெரிதாய், சிறிதாய், மிகச் சிறிதாய் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகின்றன பல பரிசுகள். இவைகளில் பலவற்றை நாம் பரிசாக, அன்பளிப்பாகக் கூடப் பார்ப்பதில்லை. ஒரு சின்னத்தனமான கேள்வியை கேட்க விழைகிறேன். நமது கால் கட்டை விரலுக்கு அல்லது நமது காலடியில் அவ்வப்போது மிதிபடும் புல்தரைக்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா?

சகோதரர் David Steindl-Rast எழுதிய "நன்றி நிறைந்திருப்பது, செபத்தின் மையம்" என்ற புத்தகத்தில் இரண்டாவது பிரிவின் தலைப்பு "வியப்பும் நன்றி நிறைதலும்" (Surprise and Gratefulness). ஒவ்வொரு முறையும் நம்மை ஏதாவது ஒரு நிகழ்ச்சி வியப்பில் ஆழ்த்தும்போது, நம்மையும் அறியாமல் நன்றி சொல்கிறோம். வியப்பு என்பது மிக பிரமாண்டமாய் வர வேண்டும் என்பதில்லை. சில வேளைகளில் மிகச் சாதாரணமானவை, மிகச் சிறியவை நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்று கூறும் David, அதை விளக்க தன் வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். சிறுவனாய் இருந்த போது, சாவை மிக அருகில் பார்த்தவர் David. அவர் வாழ்ந்தது நாத்சி இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட Austriaவில். ஒரு நாள் அவர் ஒரு கோவிலுக்கருகே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குண்டுத் தாக்குதல் ஆரம்பமானது. அவர் கோவிலுக்குள் சென்று பதுங்கினார். கோவிலைச் சுற்றிலும் குண்டுகள் விழுந்தன. கோவிலின் கண்ணாடி சன்னல்கள் தெறித்தன. அரை மணி நேரம் கழிந்து, தாக்குதல் முடிந்ததென அறிவிக்கும் சங்கு ஒலித்தது. சிறுவன் David கோவிலை விட்டு வெளியே வந்தார். அரை மணி நேரத்திற்கு முன் அவர் நடந்து வந்த அந்த தெருவில் இருந்த அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாய், சாம்பலாய் இருந்தன. அந்த அழிவுகளுக்கு மத்தியில் ஒரு சிறு புல்தரை பசுமையாய் இருந்தது. ஒரு புல்தரை இவ்வளவு அழகாக இருக்குமா என்பதை சிறுவன் David வியந்து பார்த்ததாகக் கூறியுள்ளார். வாழ்வில் சின்னச் சின்ன கொடைகளையும் கண்டு வியப்படையும் மனதை அன்று தான் கற்றுக் கொண்டதாக David கூறியுள்ளார்.

நம் கால் கட்டைவிரல், நம் காலடியில் இருக்கும் புல்தரை என்று நம்மைச் சுற்றியுள்ளவைகளை நினைத்து வியப்படையாமல், நம்மிடம் இல்லாதவைகளுக்கு ஏங்கி நம் நேரத்தை அதிகம் செலவிடுகிறோமா என்பதைச் சிந்திக்கலாம். எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் நான் வாசித்த ஓர் உவமை போன்ற கதை இது:
நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். எனக்கு அந்த அழகு இல்லையே என்று கொஞ்சம் ஏக்கம். அவள் சிரித்தபடியே சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த இடமே கலகலப்பாய் இருந்தது. அவளது கலகலப்பு என்னிடம் இல்லையே என்று மனம் புழுங்கியது. அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுந்தாள். அப்போது தான் தெரிந்தது அவளுக்கு இருந்தது ஒரு கால் தான் என்று. குச்சி ஊன்றி என்னைக் கடந்து செல்லும்போது, என்னைப் பார்த்தும் அவள் சிரித்தாள்.
நான் ஒரு விளையாட்டுத் திடலுக்குச் சென்றேன். அங்கு ஓர் அழகான சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவனது நீலக் கண்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் அப்படி கண்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கினேன். அவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடாமல் ஓரத்தில் இருந்து விளையாட்டை இரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் சென்று, "நீயும் போய் விளையாட வேண்டியதுதானே!" என்று சொன்னேன். நான் சொன்னது எதுவும் அவனைப் பாதிக்க வில்லை. அவன் விளையாட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் கேட்கும் திறன் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

உலகளாவிய ஒரு பார்வையில் மற்றொரு மின்னஞ்சல் எனக்குச் சொல்லித் தந்தது இது:
நீங்கள் இன்று காலை ஓரளவு சுகத்துடன் கண் விழித்திருந்தால், பேறு பெற்றவர்கள். இந்த வார இறுதிக்குள் இறக்கவிருக்கும் பத்து லட்சம் மக்களை விட நீங்கள் பேறு பெற்றவர்கள்.
போர் அபாயம், சிறை வாசம், சித்திரவதைகள் ஏதும் இல்லாமல் உங்கள் வாழ்வு செல்கிறதென்றால், நீங்கள் பேறு பெற்றவர்கள். உலகில் ஒவ்வொரு நாளும் 50 கோடி மக்களுக்கு இந்த நிலை இல்லை.
பயமேதுமின்றி உங்களால் ஒரு சமய வழிபாட்டில் கலந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உலகின் 30 கோடி மக்களை விட பேறு பெற்றவர்கள்.
உடுத்த உடையும், இரவில் உறங்க ஒரு வீடும் உங்களுக்கு இருந்தால், உலகின் 75 விழுக்காட்டு மக்களை விட நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள்.
உங்களால் இந்த மின்னஞ்சலை வாசிக்க முடிந்தால், வாசிக்க விருப்பம் இருந்தும் வாசிக்க முடியாமல் தவிக்கும் 20 கோடி மக்களை விட நீங்கள் எவ்வளவோ மேலான இடத்தில் இருக்கிறீர்கள். "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." என்று திருப்பாடல் ஆசிரியருடன் நாமும் சேர்ந்து வியப்போடு நன்றியோடு பாடுவோம். நன்றி என்பது ஒரு மன நிலை, நம்மை, நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கும் ஒரு மன நிலை. இந்த மன நிலையை இன்னும் சிறிது ஆழமாய் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.