2011-02-08 15:34:26

மத்திய ஜாவா-ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மூன்று ஆலயங்களையும் ஒரு கிறிஸ்தவ கருணை இல்லத்தையும் நலவாழ்வு மையத்தையும் தாக்கியுள்ளனர்


பிப்.08,2011. இந்தோனேசியாவில் வழங்கப்பட்ட தேவநிந்தனைக் குற்றம் சம்பந்தப்பட்ட தீர்ப்பு தளர்த்தப்பட்டது போல் தெரிந்ததால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மூன்று ஆலயங்களையும் ஒரு கிறிஸ்தவக் கருணை இல்லத்தையும் நலவாழ்வு மையத்தையும் இச்செவ்வாய் காலை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

Richmond Bawengan Antonius என்ற கிறிஸ்தவர், மதத்தைப் பரப்பினார் மற்றும் இசுலாமுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு இச்செவ்வாய் காலை மத்திய ஜாவாவின் Temanggung நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.

இவருக்கு மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதில் கோபமடைந்த முஸ்லீம்கள் வன்முறைத் தாக்குதலை நடத்தினர். காவல்துறை தலையிட்ட பிறகே இந்த வன்முறை நிறுத்தப்பட்டதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்தோனேசியாவின் வட சுலவேசியைச் சேர்ந்த Bawengan, Temanggung நகருக்குச் சென்ற சமயம் அச்சடிக்கப்பட்ட கிறிஸ்தவத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் மற்றும் அவற்றில் சில இசுலாமிய அடையாளங்கள் கேலி செய்யப்பட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு 2010ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கு விசாரணை இச்செவ்வாயன்று நடைபெற்றது.

புனிதர்கள் பேதுரு பவுல் கத்தோலிக்க ஆலயம்தான் முதன் முதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசியா, உலகில் அதிகமான முஸ்லீம்கள் வாழும் நாடாகும்.








All the contents on this site are copyrighted ©.