2011-02-05 15:00:37

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
கதை, கவிதை உருவகங்களில் பேசுவது ஒரு தனி கலை. இக்கலையில் தேர்ந்தவர்களில் பலர், வார்த்தை விளையாட்டுக்களில் மூழ்கி, வாழ்க்கைக்குப் பயனுள்ள எதையும் சொல்லாமல் போகும் வாய்ப்பு உண்டு. இயேசு உருவகங்களில், உவமைகளில் பேசினார். வாழ்க்கைக்குப் பயனுள்ளவைகளையே பேசினார். அவர் பயன்படுத்திய உருவகங்கள் தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை. எந்தவித அடுக்கு மொழியோ, அலங்காரமோ இல்லாமல் அவர் சொன்ன உவமைகள், உருவகங்கள் மக்களின் மனங்களில் ஆழமாய், பாடங்களாய் பதிந்தன.

இயேசுவின் படிப்பினைகளில் பலவற்றைத் தொகுத்து, மத்தேயு தனது நற்செய்தியில் 5 முதல் 7 வரை மூன்று பிரிவுகளில் மலைப்போழிவாகத் தந்துள்ளார். இந்த மலைப்பொழிவின் ஆரம்பமான 'பேறுபெற்றோர்' பகுதியை சென்ற வாரம் ஞாயிறு நற்செய்தியாகக் கேட்டோம். இந்த ஞாயிறும், இனி தொடரும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளும் இந்த மலைப்பொழிவின் வெவ்வேறு பகுதிகளைக் கேட்கவிருக்கிறோம்.
இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில் இயேசு இரு உருவகங்களைக் கூறியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்று இயேசு தன சீடரை நோக்கிக் கூறியுள்ளார். உப்பும் விளக்கும் இல்லாத வீடுகள் இல்லை. ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா வீடுகளிலும் பயன்படுவது உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு கூற்றுக்களையும் இன்று ஆழமாய் அலசுவது நமக்கு நன்மை தரும்.

மண்ணுலகிற்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, இந்த வரியை இரு நிலைகளில் சிந்திக்கலாம். உப்பாக இருப்பது என்றால் என்ன? உலகிற்கு உப்பாக இருப்பது என்றால் என்ன?


உப்பாக இருப்பதன் பொருள் இவை என்றால், உலகத்தின் உப்பாக இருப்பதைப் பற்றி சிந்திக்கலாம். இயேசுவின் சீடர்கள் உலகின் உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?

"மண்ணுலகிற்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள்." என்று இயேசு கூறும்போது இவ்வெண்ணங்களை நம் உள்ளத்தில் அவர் பதிக்கிறார்.

இவ்வார்த்தைகளைச் சொன்னதும், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பே சுவையிழந்து போனால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? அது உப்புப் படிகங்களாய் இருக்கும் வரை அதன் சுவையைக் குறைப்பதோ, அழிப்பதோ இயலாது. ஆனால், உப்புடன் பிற மாசுப் பொருட்கள் கலந்தால், உப்பு சூரியன் அல்லது அதிக வெப்பத்தால் தாக்கப்பட்டால் அதன் சுவையை இழந்துவிடும். அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில், உப்பை நீரில் கரைத்து, அதனுள் மின்சக்தியைச் செலுத்தினால் மாற்றங்கள் உருவாகும். உலகின் உப்பாக இருக்கும் இயேசுவின் சீடர்களும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, தளர்ந்து, உலகச் சக்திகளால் ஈர்க்கப்பட்டால், தாக்கப்பட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு.

சுவையிழந்த, பயனற்ற உப்பு வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும். மிதிபடும் உப்பைப் பற்றிச் சிந்திக்கும் பொது, என் மனதில் வேறொரு எண்ணமும் எழுகிறது. உணவுக்கு உயிரோட்டமாய் இருக்கும் உப்பு தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில் எத்தனையோ மக்கள் இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். இவர்கள் இல்லையேல் உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், இவர்கள் ஒருபோதும் உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. உலகெங்கும் துப்புரவுத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள கோடி, கோடி மக்களை இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாமல் ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள் ஒரு நாள் மட்டும் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடித்து உழும் விவசாயிகள், என்று பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்து பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப் போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதை, மதிப்பு இவைகளை வழங்கும் மனம் நமக்கு வேண்டும்; உலகமும் இவர்களுக்கு உரிய மதிப்பை வழங்க வேண்டும் என்று செபிப்போம்.

"உலகிற்கு நீங்கள் ஒளியாக இருக்கிறீர்கள்." என்பது இயேசுவின் அடுத்த உருவகம். ‘ஒளி’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள்’ என்ற சொல் தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். இருள், இரவு இவை இருக்கும்போதுதானே ஒளியைப் பற்றி, விளக்கைப் பற்றி நாம் எண்ணிப் பார்ப்போம். நடுப்பகலில் விளக்கை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.
இரவில் ஏற்றப்படும் விளக்கு, உணவில் கலக்கப்படும் உப்பைப் போலவே, தன்னையே விளம்பரப்படுத்துவதில்லை. விளக்கின் ஒளியில் மற்ற பொருட்களே வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும்.
மெழுகு திரியோ, அகல் விளக்கோ, மின்சார விளக்கோ, எந்த வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான் வெளிச்சம் தர முடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்க, இழக்க மறுக்கும் விளக்கு ஒளி தர முடியாது.
உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக் கொள்ள முன்வர வேண்டும். தங்களையே விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும் நம் திறமைகளை உலகறியச் செய்யவேண்டும். இப்படிச் செய்வது நம் திறமைகளுக்கு நாம் தரும் விளம்பரம் அல்ல, மாறாக, நமது திறமைகள் மூலம் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று நமக்கு நமது பணியை நினைவுபடுத்துகிறார். உலகின் உப்பு, ஒளி நாம் என்று மலைமீது நின்று உலகெல்லாம் கேட்கும்படி நம்மைப் பற்றி இயேசு பெருமையுடன் பறை சாற்றியுள்ளார். நம்மீது இயேசு கொண்டிருக்கும் இந்த பெரும் எண்ணங்களுக்கு ஏற்ப உப்பாக, ஒளியாக வாழ்வோம்.
நாம் எப்போது ஒளியாக வாழமுடியும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் கூற்றாகவே இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார். அவரது வார்த்தைகளுடன் நமது சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

எசாயா 58: 6-10கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்: அவர் உனக்குப் பதிலளிப்பார்: நீ கூக்குரல் இடுவாய்: அவர் இதோ! நான் என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்: இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.







All the contents on this site are copyrighted ©.