2011-02-05 15:28:40

எகிப்திய மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துள்ளது - கர்தினால் நகுய்ப்


பிப்.05,2011. எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்து நாட்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பித் தொழில்களைத் தொடங்குமாறு அந்நாட்டு அலெக்ஸாந்திரியக் காப்டிக்ரீதி கத்தோலிக்கப் பிதாப்பிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்து நாட்டு வரலாற்றின் இடர்செறிந்த இந்த நேரத்தைக் கத்தோலிக்கத் திருச்சபை தனது இதயத்தில் தாங்கியுள்ளது என்று கூறிய முதுபெரும் தலைவர் கர்தினால் அந்தோணியோஸ் நகுய்ப், நாடு இழந்துள்ள சேதத்திலிருந்து எழும்பி மீண்டும் கட்டி எழுப்பப்படுவதற்கு உதவியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறினார்.

எகிப்தில் அமைதியும் உறுதியான தன்மையும் ஏற்படவும் நாட்டுத் தலைவர்கள் விவேகமும் புரிந்துணர்வும் கொண்டு நாட்டை வழிநடத்தவும் இறைவனிடம் செபிப்பதாகவும் கர்தினால் கூறியுள்ளார்.

எகிப்து நாட்டை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் 82 வயதாகும் அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமானப் பொருட்சேதமும் ஆட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இவ்வெள்ளிக்கிழமை மட்டும் கெய்ரோவில் சுமார் ஒரு இலட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எகிப்தின் எட்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். இவர்களில் பெரும்பாலானோர் சுன்னிப் பிரிவு இசுலாமைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவர்கள் பத்து விழுக்காட்டினர் மட்டுமே.







All the contents on this site are copyrighted ©.