2011-02-04 17:00:25

பிப்ரவரி 05. வாழ்ந்தவர் வழியில்...........


இன்று நாம் நோக்க விருப்பது நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் ஓர் இந்திய சிறுமியைப் பற்றி. ஸ்ரீஇலட்சுமி சுரேஷ் என்ற இந்த 13 வயது சிறுமி கேரளாவின் கோழிகோட்டைச் சேர்ந்தவர். 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 5ந்தேதி பிறந்த இவர், தன் நான்கு வயதிலேயே கணனியில் ஆர்வம் காட்டத் துவங்கினார். 6 வயதிலேயே இணைய பக்கங்களை வடிவமைப்பதில் தன் கவனத்தைத் திருப்பினார். தன் பள்ளிக்கான இணைய பக்கத்தை இவரே வடிவமைத்துக் கொடுத்தபோதுதான் இச்சிறுமியின் ஆற்றல் உலகுக்கு தெரிய வந்தது. ஒன்பது வயது சிறுமியான ஸ்ரீஇலட்சுமி சுரேஷ் வடிவமைத்த இந்த இணைய பக்கத்தை வனத்துறை அமைச்சர் பினாய் விஸ்வாம் துவக்கி வைத்தார். ஸ்ரீஇலட்சுமியைக் கௌரவிக்க விரும்பிய இணையதள வடிவமைப்பாளர்களின் அமெரிக்க கழகம், Gold Web விருதை வழங்கியது. அரும்பெரும் சாதனைகள் நிகழ்த்தும் குழந்தைகளுக்கான மிகப்பெரும் விருது 2008ம் ஆண்டு இந்திய அரசால் ஸ்ரீஇலட்சுமிக்கு வழங்கப்பட்டது. கேரள மாநிலம் குறித்த அனைத்து விவரங்களையும் கொண்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நோக்கில் ஓர் இணைய தளத்தையும் வடிவமைத்து நடத்தி வருகிறார் இச்சிறுமி. இந்தியா, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரசில், மற்றும் ஹவாயிலிருந்து என, இதுவரை 25க்கும் மேற்பட்ட விருதுகளை இணையதள அமைப்புகளிலிருந்துப் பெற்றுள்ளார் ஸ்ரீலட்சுமி. அமெரிக்க இணையதள வடிவமைப்பாளர்கள் கழகத்தின் அங்கத்தினர்களுள் 18 வயதிற்குட்பட்டவர் இவர் ஒருவரே. 13 வயதான இச்சிறுமியின் கல்வி ஆர்வமும் சாதனைகளும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தருவதென்ன?








All the contents on this site are copyrighted ©.