2011-02-04 17:16:46

தேவநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைத்த மசோதா திரும்பப்பெறப் பெற்றுள்ளதற்கு பேராயர் கவலை


பிப்.04,2011 பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைத்து மசோதாவைச் சமர்ப்பித்த ஒருவர் அதனைத் திரும்பப் பெறுவதற்கு நிர்ப்பந்தப்படுத்திய அரசின் தீர்மானத்தை வன்மையாய்க் கண்டித்துள்ளார் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்.

பாகிஸ்தான் அரசு, தேவநிந்தனைச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவருவதற்கு ஒருபொழுதும் எண்ணியது கிடையாது மற்றும் இந்த தேவநிந்தனைச் சட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கானக் கமிட்டியையும் அரசு கலைத்துள்ளது என்று பிரதமர் Yousaf Raza Gilani இப்புதனன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்த Sherry Rehman அதனைத் திரும்பப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளார் என்றும் பிரதமர் அறிவித்தார்.

இசுலாமியக் கட்சிகளின் வற்புறுத்தல்களுக்கு உடன்பட்டது தவறு என்றுரைத்த பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா, இந்தப் பிரச்சனைக்குரிய சட்டங்களில் அண்மை எதிர்காலத்தில் மாற்றங்கள் இடம் பெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கவலை தெரிவித்தார்.

எனது கட்சியின் தீர்மானத்திற்குப் பணிவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இம்மசோதாவைப் பரிந்துரைத்த ரெஹ்மான் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டங்கள் தொடர்பான வன்முறைகளில் 1,392 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசு-சாரா அமைப்புகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.