2011-02-04 17:22:31

சர்வதேச புற்றுநோய் தினம்


பிப்.04,2011. ஒரு வாரத்தில் சுமார் 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்தால் மார்பு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் இவ்வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது.

இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட உலக நலவாழ்வு நிறுவனம், புற்று நோய், உலகில் இடம் பெறும் இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்று கூறியது.

2005க்கும் 2015க்கும் இடைபட்ட காலத்தில் உலகில் புற்று நோயால் சுமார் எட்டு கோடியே நாற்பது இலட்சம் பேர் இறப்பார்கள் என்றும் உலகில் இரண்டு ஆண்களுக்கு ஒருவர் மற்றும் மூன்று பெண்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தங்கள் வாழ்நாளில் புற்று நோயால் பாதிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்றும் அந்நிறுவனம் கூறியது.

ஆரோக்யமான வாழ்க்கைத் தரத்தை மேற்கொண்டால் பிரிட்டனில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய எண்பதாயிரம் புற்று நோய் இறப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் மூன்று இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் இந்நோயால் இறக்கின்றனர்







All the contents on this site are copyrighted ©.