2011-02-03 15:37:19

மறைந்தத் திருத்தந்தை இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலை புது டில்லியில் திறப்பு


பிப்.03,2011. புது டில்லியில் உள்ள இயேசுவின் திரு இருதயப் பேராலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்தத் திருத்தந்தை இறையடியார் இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலையை திருத்தந்தையின் பிரதிநிதியாக இந்தியா சென்றிருக்கும் கர்தினால் Cormac Murphy O'Connor இப்புதனன்று திறந்து வைத்தார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவில் 1986ம் ஆண்டு மேற்கொண்ட முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டு நினைவைக் கொண்டாட திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக தற்போது இந்தியாவில் பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் O 'Connor, திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் உருவச்சிலையைத் திறந்து வைத்தபின் திருப்பலியும் நிகழ்த்தினார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias, இந்திய இலத்தீன்ரீதி ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Telesphore Toppo, பேராயர் Vincent Concessao மற்றும் பிற ஆயர்களுடன் நடத்தப்பட்டத் திருப்பலியில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த 25ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அனுப்பியிருந்த சிறப்பு செய்தியையும் கர்தினால் O'Connor வாசித்தார்.திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி இவ்வியாழனன்று இந்தியாவின் அரசுத் தலைவரைச் சந்தித்தபின் மகாத்மா காந்தியின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அடுத்த பத்து நாட்கள் ராஞ்சி, கொல்கத்தா, கொச்சி, மும்பை ஆகிய இடங்களில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருப்பயண 25ம் ஆண்டு நினைவாக நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கர்தினால் Murphy O'Connor கலந்து கொள்வார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.