2011-02-03 15:38:34

சீனக் கத்தோலிக்கர்கள் மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடன் மேற்கொண்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்


பிப்.03,2011. குளிர் காலத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தாலும் சீனக் கத்தோலிக்கர்கள் மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடனும், திருப்பலியுடனும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேற்கொண்டனர்.
முயலின் ஆண்டு என்று அழைக்கப்படும் 2011ம் ஆண்டை Taiyuan மறைமாவட்டத்தின் துணை ஆயர் Ningyou Meng மெழுகுதிரிகள் ஏந்திய பவனியுடன் இப்புதன் நள்ளிரவு ஆரம்பித்து வைத்தார். கிறிஸ்து உலகின் ஒளியாக இருக்கிறார் என்ற கருத்தில் இந்த பவனி நடத்தப்பட்டதென்று அவர் விளக்கினார்.
இவ்வியாழனன்று ஆரம்பமாகும் சீனப் புத்தாண்டன்று ஐந்துத் திருப்பலிகள் நடைபெறும் என்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் மக்களின் பங்கேற்பு அதிகம் இருக்கும் என்றும் ஆயர் Meng கூறினார்.இப்புத்தாண்டையொட்டி ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இளையோர் தன்னார்வக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதென்றும், இக்குழுவினர் புத்தாண்டு விழாக்களில் கலந்து கொள்ள முடியாத வயதானோர், நோயுற்றோர் ஆகியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உணவும் உடைகளும் வழங்க உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.