2011-02-02 15:33:04

பிப்ரவரி 03. – வாழ்ந்தவர் வழியில்........,


1909 செப்டம்பர் 15ல் பிறந்து 1969 பிப்ரவரி 3ந்தேதி காலமான C. N. அண்ணாத்துரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாத்துரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர். தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் ஈடுபட்டார். பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.க வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார். ‘மதராஸ் மாநிலம்’ என்றிருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்.

புற்று நோய்க்கு ஆளான இவர், 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தின்போது சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இது அன்றைய காலகட்டத்தில் ஒரு கின்னஸ் உலகச் சாதனை. ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஓர் அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் ‘ அண்ணா’ என்று அழைக்கப்படும் அண்ணாத்துரை நினைவு கூரப்படுகிறார்.








All the contents on this site are copyrighted ©.