2011-02-02 15:32:49

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


பிப்ரவரி 02, 2011. இப்புதனன்று உரோம் நகரின் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதன் பொது மறைபோதகமானது, புனித அவிலா தெரேசா பற்றியதாக இருந்தது.

கார்மல் சபையின் சீர்திருத்தவாதியான 16ம் நூற்றாண்டின் புனிதை அவிலா தெரேசா, திருத்தந்தை ஆறாம் பவுலால் திருச்சபையின் மறைவல்லுனராகவும் அறிவிக்கப்பட்டவர். புனித தெரேசா தன் 20ம் வயதில் அவிலாவிலுள்ள கார்மல் மடத்தில் நுழைந்தார். ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சியைக் கண்ட இவர், தன் சபையைப் புதுப்பிக்க வேண்டும் என்ற கொள்கையைத் தழுவினார். புனித திருச்சிலுவை அருளப்பரின் ஆதரவுடன், இவர் சீர்திருத்த கார்மல் மடங்களை ஒரு சங்கிலித்தொடர் போல் இஸ்பெயின் நாடு முழுவதும் நிறுவினார். மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்கிய அவரின் எழுத்துக்களான, முழு நிறைவின் பாதை(The Way of Perfection), அகக் காப்பரண் (The Interior Castle), மற்றும் அவரின் சுயசரிதை நூல், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அவரின் ஆழமான ஆன்மீகத்தையும், மனித அனுபவங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக, நற்செய்தி மற்றும் மனித நற்பண்புகளைக் கண்டார் புனித தெரேசா. கிறிஸ்துவின் மனிதத்தன்மையோடு தன்னை ஆழமாக இனம் கண்ட இவர், திருநற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னம் மற்றும் அவரின் பாடுகள் குறித்து ஆழமாக தியானிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கிறிஸ்துவுடனான நெருங்கிய நட்புணர்வாகவும், தூய மூவொரு கடவுளுடனான அன்பின் மேலான ஐக்கியத்திற்கு இட்டுச் செல்வதாகவும் செபத்தை முன்வைத்தார் புனித அவிலா தெரேசா. அவர் தன் வாழ்விலும் மரணத்திலும் திருச்சபைக்கான முன் நிபந்தனையற்ற அன்பைக் கொண்டிருந்தார். புனித அவிலா தெரேசாவின் எடுத்துக்காட்டும் செபங்களும், செபத்திற்கான நம் விசுவாச உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கவும், அச்செபத்தின் வழி ஆண்டவருக்கும் அவரின் திருச்சபைக்குமான மேலான அன்பிற்கும், நம் சகோதர சகோதரிகளுக்கான முழுமையான பிறரன்பிற்கும் நம்மைத் தூண்டுவதாக என தன் புதன் மறைபோதகத்தை நிறைவுச் செய்தார் திருத்தந்தை.

பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.