2011-02-01 15:55:43

திருத்தந்தை: நற்செய்தி அறிவிப்பின் பெரும் பணி, இறையழைத்தல்கள் அதிகரிப்பதைச் சார்ந்து இருக்கின்றது


பிப்.01,2011. நற்செய்தி அறிவிப்பின் பெரும் பணி, இறைவனின் அழைப்புக்குத் தாராள மனத்துடன் பதில் அளித்து நற்செய்திக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்போரைச் சார்ந்து இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இறையழைத்தல்கள் அதிகரிப்பது, திருச்சபையின் உயிர்த்துடிப்பான இருப்பு மற்றும் அனைத்து இறைமக்களின் உறுதியான விசுவாச வாழ்வின் அடையாளமாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

மத்திய அமெரிக்க நாடான கோஸ்த்தா ரிக்காவின் கார்த்தகோவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள, இலத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இரண்டாவது இறையழைத்தல் மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வு, திருச்சபையின் பண்பை விளக்கும் இறையழைத்தல் கூரையும் உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.

இறையழைத்தல், மனிதத் திட்டத்தாலோ அல்லது நிர்வாக யுக்தியின் பலனாலோ கிடைப்பது அல்ல, மாறாக அது கடவுளின் கொடை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறையழைத்தல் அதிகரிக்க ஆன்மீக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

தனியாகவும் சமூகமாகவும் கிறிஸ்துவுடன் ஒன்றித்த வாழ்வுக்குச் சாட்சியமாக இருப்பதும் இறையழைத்தல் அதிகரிக்க வாய்ப்பாகும் என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

இந்த மாநாடு பிப்ரவரி 5 வருகிற சனிக்கிழமை நிறைவடையும்








All the contents on this site are copyrighted ©.