2011-02-01 15:59:18

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன


பிப்.01,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டு நிகழ்வுகள் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளன.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1986ம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 11ம் தேதி வரை இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு நாட்டில் அமைதி, நீதி மற்றும் ஐக்கியம் பற்றிய செய்திகளை தைரியமுடன் எடுத்துச் சொன்னார்.

இந்தப் பயணத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகள் புதுடெல்லி, ராஞ்சி, கல்கத்தா, கொச்சின், மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் சிறப்பாக இடம் பெறுகின்றன.

“இறையழைத்தல்” என்ற தலைப்பில் புதுடெல்லியிலும், “பழங்குடி மற்றும் தலித் மக்கள்” என்ற தலைப்பில் ராஞ்சியிலும், “பிறரன்பும் சமூகப்பணியும்” என்ற தலைப்பில் கல்கத்தாவிலும், “நற்செய்தி அறிவிப்பு” என்ற தலைப்பில் கொச்சினிலும், “உரையாடல், இளையோர், குடும்பம்” என்ற தலைப்பில் மும்பையிலும் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இக்கொண்டாட்டங்களின் தொடக்கமாக, புதுடெல்லியில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்தியத் திருப்பயணம் பற்றிய புத்தகம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.. திருப்பீடத் தூதரகத்தில் அத்திருத்தந்தையின் உருவமும் திறந்து வைக்கப்பட்டது. இப்புதனன்று திருப்பீடத்தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ புதுடெல்லி பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.







All the contents on this site are copyrighted ©.