2011-01-31 15:01:40

“வாழ், அன்பு செய், கற்றுக் கொள்”


சன.31,2011. மனித உரிமைகள் மறுக்கப்படும் மாதங்கள் எல்லாமே கறுப்பு ஜூலைகள்தான்... மனித மனங்களில் பிடித்த மதம் மடியும்வரை மாதங்களெல்லாம் கறுப்புத்தான்...! இலங்கைத் தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாகி, சொத்துகள் அழிக்கப்பட்டு மூவாயிரம் பேர்வரை படுகொலை செய்யப்பட்ட அந்தத் துன்பவியல் நடந்த 1983ம் ஆண்டு ஜூலை, கறுப்பு ஜூலை என்றுதான் தமிழர் வரலாற்றில் வேதனையோடு நினைவுகூரப்படுகின்றது. இப்படி உரிமைகள் மறுக்கப்பட்டு மிருகங்களைவிட மிகக் கேவலமாக நடத்தப்பட்ட இனங்கள் பற்றி வரலாற்றின் பக்கங்களில் பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இன்றும் உரிமைக்கானப் போராட்டங்கள் தொடர்கின்றன. இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே சட்டத்திற்குப் புறம்பாகக் கொலைகள் செய்ததாகக் குற்றம் சுமத்தி அவர்மீது அமெரிக்க ஐக்கிய நாட்டில் நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட மூவர் சார்பாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க வழக்கறிஞரான புரூஸ் ஃபெய்ன் முப்பது மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை கேட்டுள்ளதாக இச்சனிக்கிழமைச் செய்தி ஒன்றில் வாசித்தோம்.

வட ஆப்ரிக்க அரபு நாடான டுனிசியாவில் மக்கள் கொந்தளிப்பு அடங்கி அமைதி நிலவத் தொடங்கிய நேரத்தில் மற்றுமொரு வட ஆப்ரிக்க அரபுக் குடியரசான எகிப்திலும், இன்னும் ஏமனிலும் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக்கின் முப்பது வருட ஆட்சி மீது அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இம்மாதம் 25ம் தேதியை அரசுக்கு எதிரான கோப தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். எகிப்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், ஊழல் ஆகியவை மக்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்டிரியா, சூயஸ் போன்ற முக்கிய நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தாலும் அதையும் புறந்தள்ளி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5,000 கைதிகள் சிறைகளை உடைத்து தப்பி ஓடி விட்டனர். கடைகளும், வணிக நிறுவனங்களும் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன. கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் நான்காயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

இத்திங்களன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு இப்போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை கவுரவிக்கும் செபவழிபாடுகள் நடத்தப்பட்டன. “இலட்சக்கணக்கானோரின் போராட்டம்” என்று பெயரிட்டு இச்செவ்வாயன்று மாபெரும் பேரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அழைப்பை ஏற்று இராணுவ வீரர்கள் பலர் தங்களது சீருடைகளைக் களைந்துவிட்டு அரசுக்கு எதிரானப் போராட்டத்தில் குதித்துள்ளனர். எகிப்து வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் பலரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது அமைச்சரவையைக் கலைப்பதாகவும் நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுப்பதாகவும், பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்தார். அவரது முப்பது ஆண்டுகால ஆட்சியில் முதல் முதலாக துணை அதிபர் ஒருவரை நியமித்துள்ளார். முபாரக்கின் எந்த அறிவிப்பிலும் மக்களுக்கு உடன்பாடில்லை. இப்போதையப் பிரச்னைக்கு ஒரே தீர்வு முபாரக் பதவியைத் துறந்து எகிப்தில் இருந்து வெளியேற வேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமா, “எகிப்து மக்களின் அமைதியானப் போராட்டம் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. மக்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கும், பொதுக்கூட்டங்கள் நடத்திக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் உரிமை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா முழுவதிலும் எகிப்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது குடிமக்களை எகிப்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுள்ளன. தலைநகர் கெய்ரோவில் மட்டும் 2,200 இந்தியர்கள் உள்ளனர். சுதந்திரம் மற்றும் சனநாயக வாழ்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும் நாடுகளின் தலைவர்களைக் கேட்டுள்ளார்.

இன்றைய உலக நிலைமை இவ்வாறிருக்க, அமெரிக்க ஐக்கிய நாடு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தை, “கறுப்பின வரலாறு மாதம்” என்று கடைபிடிக்கிறது. 1926ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மாதம், பிரிட்டன் மற்றும் கனடாவிலும் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில், ஆப்ரிக்க-அமெரிக்க இனப் படைவீரர்களும் குடிமக்களும் இராணுவத்திற்கு ஆற்றிய தொண்டுகள் நன்றியுடன் நினைவுகூரப்படுகின்றன. “உண்மை ஒருபோதும் மறுக்கப்படக் கூடாது” என்று சொல்லி இந்தக் கறுப்பின மாதத்தைத் தொடங்கி வைத்தவர் கறுப்பின வரலாற்று ஆசிரியர் முனைவர் Carter G.Woodson. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த வுட்சன், சிறுவயதில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்தார். தனது இருபதாவது வயதில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் அப்படிப்பை முடித்தார். பின்னாளில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1926ம் ஆண்டு பிப்ரவரியில், Abraham Lincoln, Frederick Douglass ஆகியோரின் பிறந்த நாட்களையும் சேர்த்து இவர் கொண்டாடிய கறுப்பின வாரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. 1950ல் இவர் இறந்த போது “இந்த வாரம்” ஆப்ரிக்க-அமெரிக்கர் வாழ்க்கையின் மையமாக மாறியது. 1976ல், இந்நாடு தனது இருநூறாம் ஆண்டைச் சிறப்பித்த போது இந்தக் கறுப்பின வாரம், மாதக் கொண்டாட்டமாக மாறியது. கறுப்பின அமெரிக்கர்கள் அந்நாட்டு வரலாற்றின் ஒவ்வொரு பகுதியிலும் செய்துள்ள அரும்பணிகள் கவுரவிக்கப்படுவதற்கு இந்தக் “கறுப்பின மாதம்” நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று அப்போதைய அரசுத் தலைவர் Gerald R. Ford கூறினார்.

2011ம் ஆண்டு இந்த மாதம், “ஆப்ரிக்க அமெரிக்கர்களும் உள்நாட்டுப் போரும்” என்ற தலைப்பில் அனுசரிக்கப்படுகின்றது. இந்தத் தலைப்பானது, ஆப்ரிக்க வம்சா வழியைக் கொண்டு அமெரிக்காவில் வாழும் மக்கள், அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளை கவுரவிக்கவும், அதேவேளை ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் அந்நாட்டுக்குத் தாங்கள் செய்து வருவதைச் சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்தானே. 2004ம் ஆண்டு ஜூலை கணக்கெடுப்பின்படி அமெரிக்க ஐக்கிய நாட்டில் 3 கோடியே 92 இலட்சம் பேர் ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருந்தனர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 13.4 விழுக்காட்டினர்.

1776ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு என்ற ஒரு நாடு உருவாக்கப்படுவதற்கு முன்னர், அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, பெரும்பாலும் தென் பகுதியில் அடிமைத்தனம் இருந்தது. 1777க்கும் 1864க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் இது ஒழிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அந்நாட்டின் அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்ட 1865ம் ஆண்டின் சனவரி 31ம் தேதியில் இது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. “அடிமைத்தனமும் தன்னார்வமற்ற பணியும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலோ, அதன் ஆளுகைக்கு உட்பட்ட எந்தப் பகுதியிலோ இனிமேல் இருக்காது” என்று அந்தத் திருத்தத்தில் சொல்லப்பட்டது. 1560களில் ஸ்பானியக் காலனிகளில் இருந்த நடைமுறையைப் பின்பற்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டில், முதல் ஆங்கிலேய காலனியாகிய வெர்ஜீனியாவுக்கு 1619ல் முதன் முறையாக ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டனர். 16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ஒரு கோடியே 20 இலட்சம் ஆப்ரிக்கர்கள் கப்பல்களில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர்.

அடிமைத்தனத்தை ஒழித்த அமெரிக்கா, அந்நாட்டின் அனைத்துப் பழங்குடி மக்களின் உரிமைகளை மதிக்கத் தவறியிருக்கிறது. பழங்குடியினர் அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டுமென 1876ம் ஆண்டு சனவரி 31ம் தேதி கட்டளைப் பிறப்பித்தது. உலகெங்கும் வாழும் பழங்குடி மக்கள் தங்களுக்கென தனிப் பழக்கவழக்கங்கள், மொழி, நிலம் ஆகியவற்றைக் கொண்டு தன்னிறைவோடு வாழ்பவர்கள். இந்தியாவில் மட்டும் 427 பழங்குடிகள் உள்ளனர். பல நாடுகளில் இந்தப் பழங்குடி மக்கள் இன்னும் முழுமையாக சுதந்திரக் காற்றை அனுபவிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வந்த அந்நாட்டுக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் ஜெரி ஒர்த்தேகா கடந்த திங்களன்று கொல்லப்பட்டுள்ளார்.

அன்பர்களே, உலக நாடுகளில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு விட்டாலும் இப்போதும் பாலியல் வியாபாரம், மனித உறுப்பு வியாபாரம், கொத்தடிமை, சிறார் தொழில் போன்ற புதுப் புது வடிவங்களில் நவீன அடிமைத்தனம் நிலவுகிறது. உரிமைக்கானப் போராட்டங்கள் நாட்டுக்கு நாடு வலுத்துவரும் வேளை, அநீதியைத் தட்டிக் கேட்பவரின் உயிர்களும் ஆங்காங்கே பொசுக்கப்படுகின்றன. இந்தியாவில் நாசிக் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக இருந்த யஷ்வந்த் சோனாவானே என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மகாராஷ்​டிரா மாநிலத்தில் நடந்த இந்தக் குரூர சம்பவம் பற்றி எழுதியுள்ள ஓர் ஊடகம், 'நேர்மையின் சம்பளம் மரணமா?’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. திருட்டுத்தனத்தைத் தட்டிக் கேட்டதற்குப் பரிசு உயிரோடு எரித்துக் கொலை.

உரிமைக்காகப் போராடிய சிலர் அதன் பலனைக் கண்டுவிட்டு இறக்கின்றனர். இன்னும் சிலர் தங்களது போராட்டத்தின் பலனைக் காண்பதற்குமுன் இறந்து விடுகின்றனர் அல்லது துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியாகி விடுகின்றனர். இவர்களது வாழ்க்கை பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. ஒரு காந்திஜியாக, ஓர் ஆபிரகாம் லிங்கனாக, ஒரு கார்டெர் வுட்சனாக, மார்ட்டின் லூத்தர் கிங்காக, பேராயர் ஆஸ்கார் ரொமேரோவாக இப்படி மகான்களாக வாழ உந்துதல் தருகிறது. Nora Eason என்பவர் சொல்கிறார்......

உனது வாழ்க்கையை நீ வாழ வேண்டிய முறையில் வாழ். உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை அன்பு செய். நீ செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள். நடப்பதற்கு மிகவும் கடினமானதாகத் தெரியும் பாதையில் வாழ். இந்த நொடிப் பொழுதில் வாழ். ஏனெனில் உனது எதிர்காலம் நிச்சயமற்றது. நீ இப்பொழுது அன்பு செய்பவரை இறுகப் பற்றிக் கொள். ஏனெனில் உனது பார்வையிலிருந்து அவர்கள் எப்போது விலகுவார்கள் என்பது உனக்குத் தெரியாது. என்ன நேரிடினும் உன் வாழ்க்கையை அன்பு செய். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள். உன்னால் முடிந்த பொருட்களுடன் வாழ். உன் அயலானை அன்பு செய். வாழ்க்கையில் எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவற்றைச் செய். மீதியைக் கடவுள் பார்த்துக் கொள்வார். வாழ்க்கையை வாழ், அன்பு செய், கற்றுக் கொள்.

நமது இன்றையச் சிந்தனையும் செயலும் நாளைய வாழ்க்கையை வடிவமைக்கும்







All the contents on this site are copyrighted ©.