2011-01-31 14:59:50

பிப்ரவரி 01 வாழ்ந்தவர் வழியில் .....


ஒரு மனிதனின் வீடு எல்லாவிதமான நேர்த்தியான பொருட்களால் நிரம்பியிருந்தாலும் அவன் அதன் உருவத்திலோ பலத்திலோ அழகிலோ நம்பிக்கை வைக்கக் கூடாது...

இவ்வாறு எச்சரித்தவர் யூதமத ராபி ஐசக் அபோப் தெ ஃபொன்சேகா (Isaac Aboab de Fonseca). 1605ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி போர்த்துக்கல் நாட்டில் பிறந்த இவர், டச்சு நாட்டு ராபியும் தியானயோகியுமாவார். 1642ம் ஆண்டில் பிரேசில், டச்சு நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருந்த போது 600 யூதர்கள் அந்நாட்டின் Recife என்ற ஊரில் ஒரு தொழுகைக்கூடத்தை எழுப்பினார்கள். அச்சமயத்தில் அவர்கள், ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்த வந்த ராபி ஃபொன்சேகாவை Recife க்கு வரவழைத்துத் தங்களின் ஆன்மீகத் தலைவராக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஃபொன்சேகாவும் பிரேசில் வந்தார். இவ்வாறு ஃபொன்சோகா, புதிய உலகின் யூதச் சமூகத்துக்கு முதல் ராபியானார். 1654ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் டச்சு நாட்டவரைத் தோற்கடித்து Recife ஐக் கைப்பற்றிய போது, ஃபொன்சேகா யூதர்கள் குழு ஒன்றுடன் நெதர்லாண்டஸ் திரும்பினார். அங்கு அவரது முன்னாள் ஆம்ஸ்டர்டாம் யூதக் குழுவினர் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அங்கிருந்த தொழுகைக்கூடத் தலைவராக மீண்டும் நியமித்தனர். அத்துடன், அந்நகரின் யூதமத நீதிமன்ற உறுப்பினராகவும் நியமித்தனர். ஐம்பது ஆண்டுகள் ஆம்ஸ்டர்டாம் யூதச் சமூகத்தினருக்குப் பணி செய்து தனது 88வது வயதில் 1693ம் ஆண்டு இறந்தார் ஃபொன்சேகா. அமெரிக்காவின் முதல் ராபியாகவும், முதல் எபிரேயக் கவிஞராகவும் இருந்த ஃபொன்சேகா, யூத மதத்தினரின் சுதந்திரத்திற்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்யவும் அஞ்சாதவராக இருந்தார் என்று அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.