2011-01-31 15:40:30

இந்தியாவில் சிறுபான்மையினராய் வாழ்வது மிகவும் சவால் நிறைந்தது - கர்தினால் லெவாடா


சன.31,2011 பல சமயங்கள் சங்கமிக்கும் இந்தியாவில் சிறுபான்மையினராய் வாழ்வது மிகவும் சவால் நிறைந்ததென்றும், இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையில் இந்தியக் கலாச்சாரங்களின் வழிமுறைகளை வளர்ப்பது இயற்கையான வழியே என்றும் வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் விசுவாசக் கோட்பாட்டு ஆணையத்தின் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாடா அண்மையில் UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்துவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து வத்திக்கான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார் கர்தினால் லெவாடா.

இந்தத் தாக்குதல்கள் கட்டாய மனமாற்றத்தைச் சுட்டிக்காட்டி எழுந்திருப்பது ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என்பதையும், வத்திக்கான் எப்போதும் கட்டாய மனமாற்றத்தை ஆதரிப்பதில்லை என்றும் எடுத்துரைத்தார்.

பூனே நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் ஞான தீப வித்யாபீத் என்ற குருத்துவ பயிற்சி நலையத்தில் 800 மாணவர்களை அண்மையில் சந்தித்த கர்தினால் லெவாடா, கடவுளைக் குறித்த ஆழ்ந்த உண்மைகளை குரு மாணவர்கள் அறிந்து கொள்ளவும், தாங்கள் உள்ளூர உணர்ந்தவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.