2011-01-28 16:05:34

சனவரி 29. வாழ்ந்தவர் வழியில்...........


இராபர்ட் ஃப்ராஸ்ட். அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் 1874 மார்ச் 26ல் பிறந்த இந்த கவிஞர் 1963 ஜனவரி 29ல் காலமானார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், முதலில் தன் கவிதைகளை பிரசுரிப்பதில் பல சிரமங்களை மேற்கொண்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில பிரசுர நிறுவனங்கள் இவரை கவிஞராகவே அங்கீகரிக்க மறுத்தன. இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இங்கிலாந்துக்குப் பயணமாகி அங்குத் தன் கவிதைத் தொகுப்புகளைப் பிரசுரித்த பின்தான் இவரின் புகழ் எங்கும் பரவியது. இவரின் கவிதைகளை முதலில் பிரசுரிக்க மறுத்த சில வெளியீட்டு நிறுவனங்கள் பின்னர் அதே கவிதைகளை கேட்டு வாங்கி பிரசுரிக்கும் நிலை வந்தது. 39 வயதிற்குப் பின் தான் இவர் பிரபலமடைந்தார்.

இவரின் கவிதைகள் மனிதர்களின் ஏக்கங்களையும், இயற்கையின் அழகையையும் வெளிப்படுத்தி நிற்பவைகளாக இருந்தன. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வுகளோடு அவைகளை இனம் காண வல்லதாயும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் அவை இருந்தன.

தன் காலத்தில் வாழ்ந்த கவிஞர்களுள், மேடைப்பேச்சுக்கும் கல்விக்குமென அதிகத் தூரம் பயணம் செய்தவர் இவராகத்தான் இருக்க முடியும்.

துவக்கக் காலத்தில் எவராலும் அங்கீகரிக்கப்படாமல் இருந்தாலும், தன் திறமையை பொறுமை மற்றும் கடின உழைப்பு மூலம் நிரூபித்தவர் கவிஞர் இராபர்ட் ஃப்ராஸ்ட்.








All the contents on this site are copyrighted ©.