2011-01-27 15:03:08

சனவரி 28 - வாழ்ந்தவர் வழியில்


லாலா லாஜ்பாட் ராய் (Lala Lajpat Rai). இவர் 1865ம் ஆண்டு சனவரி 28ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் துதுகேயில் மதிப்புமிக்க இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவர் தமது எழுத்துக்கள் மற்றும் அரசியல் வாழ்க்கை மூலம் இந்தியக் கொள்கையில் சீர்திருத்தத்தை உருவாக்கியவர். லாகூரில் சட்டம் படித்த இவர், இரண்டு ஆண்டுகளில் முதல் தேர்வில் வெற்றி அடைந்ததால் வழக்கறிஞராகப் பணியாற்றத் தகுதி பெற்றார். மாணவராக இருந்த போதே தேசியவாதியாகி சுவாமி தயானந்தாவின் ஆரிய சமாஜ் கழகத்தின ஆதரவாளரானார். 1895ல் பஞ்சாப் தேசிய வங்கி தொடங்கப்பட உதவினார். 1896க்கும் 1898க்கும் இடைப்பட்ட காலத்தில் மத்சினி, கரிபால்டி, சிவாஜி, சுவாமி தயானந்தா போன்ற பிரபலமான தலைவர்களின் சுயசரிதையை வெளியிட்டார். 1900மாம் ஆண்டில் இடம் பெற்ற தேசிய மாநாட்டில் இந்தியா தன்னிறைவுடன், உறுதியான நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 1905ல் காங்கிரஸ் பிரதிநிதியாக இலண்டன் சென்றார். காங்கிரஸ் கட்சியில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடுநிலையாளராகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். அதற்கு அடுத்த ஆண்டு பஞ்சாப் அரசு இவரைக் கைது செய்து விசாரணையின்றி பர்மாவுக்குக் கடத்தியது. 1928ல் இந்திய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்த சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராட்டங்களை வழிநடத்தினார். அப்போது இடம் பெற்ற மாபெரும் பேரணியில் காவல்துறையினரால் காயப்படுத்தப்பட்டு சில வாரங்களில் நவம்பர் 17ம் தேதி இறந்தார். லாலா லாஜ்பாட் ராயை தேசியத் தியாகியாக மக்கள் துக்கம் கொண்டாடினர்.

“பசுக்களையும் மற்ற விலங்குகளையும் கொடூரமாய்க் கொல்வது தொடங்கப்பட்டுள்ளதால் நான் வருங்காலத் தலைமுறை குறித்து கவலை கொண்டுள்ளேன்”என்று சொன்னவர் லாலா லாஜ்பாட் ராய்.







All the contents on this site are copyrighted ©.